A A A A A
Bible Book List

யோபு 6 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

யோபு எலிப்பாசுக்குப் பதில் கூறுகிறான்

அப்போது யோபு,

“என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால்,
    நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.
கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது.
    அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன.
    அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது!
    தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன.
எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது).
    காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது.
    பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது.
உப்பற்ற உணவு சுவைக்காது.
    முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை.
நான் அதைத் தொட மறுக்கிறேன்;
    அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது!
    உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன.

“நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன்.
    நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன்.
தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன்.
    அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம்.
10 அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன்.
    நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்.
    இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.

11 “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    எனக்கு என்ன நேருமென அறியேன்.
    எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை.
12 நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா?
    என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா?
13 எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை.
    ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.

14 “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும்.
    ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.
15 ஆனால் என் சகோதரராகிய நீங்களோ நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை.
    நான் உங்களைச் சார்ந்திருக்க முடியாது.
    சிலகாலம் பாய்ந்தும், மற்ற சிலகாலம் பாயாமலும் இருக்கின்ற நீரோடைகளைப்போல நீங்கள் காணப்படுகிறீர்கள்.
16 பனிக் கட்டியாலும் உருகும் பனியாலும் நிரம் பியிருக்கின்ற நீரூற்றுக்களைப்போல, நீங்கள் பொங்கிப் பாய்கிறீர்கள்.
17 உலர்ந்த வெப்பக்காலத்தில் தண்ணீர் பாய்வது நின்றுவிடுகிறது,
    நீரூற்றும் மறைந்துவிடுகிறது.
18 வியாபாரிகள் பாலைவனத்தின் வளைவுகளையும் நெளிவுகளையும் பின்தொடர்ந்து,
    காணாமல்போய்விடுகிறார்கள்.
19 தேமாவின் வியாபாரிகள் தண்ணீரைத் தேடுகிறார்கள்.
    சேபாவின் பிரயாணிகள் (பயணிகள்) நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.
20 அவர்கள் தண்ணீரைக் கண்டடைவதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்,
    ஆனால் ஏமாற்றமடைகிறார்கள்.
21 இப்போது, நீங்கள் அந்த நீருற்றுகளைப் போல் இருக்கிறீர்கள்.
    என் தொல்லைகளைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.
22 நான் உங்களிடம் உதவியை நாடினேனா?
    எனக்காக நீங்கள் யாரிடமாவது வெகுமானம் கொடுக்க வேண்டினேனா?
23 ‘பகைவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!
    கொடியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’
    என்று நான் உங்களிடத்தில் கூறினேனா?

24 “எனவே இப்போது எனக்குக் கற்பியுங்கள், நான் அமைதியாக இருப்பேன்.
    நான் செய்தவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்.
25 நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை.
    ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை.
26 என்னை விமர்சிக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?
    மேலும் சோர்வு தரும் வார்த்தைகளைச் சொல்லப் போகிறீர்களா?
27 தந்தைகளற்ற பிள்ளைகளின் பொருள்களைப் பெற, நீங்கள் சூதாடவும் செய்வீர்கள்.
    உங்கள் சொந்த நண்பனையே விற்பீர்கள்.
28 ஆனால் இப்போது, என் முகத்தை ஆராயுங்கள்.
    நான் உங்களிடம் பொய் கூறமாட்டேன்.
29 எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள்.
    அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
    நான் தவறேதும் செய்யவில்லை.
30 நான் பொய் கூறவில்லை.
    நான் சரியானவற்றை தவறுகளிலிருந்து பிரித்தறிவேன்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes