Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

“யோபுவே, விரும்பினால் கூப்பிடு, ஆனால் யாரும் பதில் தரமாட்டார்கள்!
    நீ எந்த தேவதூதனிடம் திரும்பி பார்ப்பீர்?
ஒரு மூடனின் கோபம் அவனைக் கொல்லும்,
    ஒரு மூடனின் வலிய உணர்வுகள் அவனைக் கொல்லும்.
தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன்.
    ஆனால் திடீரென அவன் மாண்டான்.
யாரும் அவனது ஜனங்களுக்கு உதவ முடியவில்லை.
    நியாயச் சபையில் அவர்களுக்கு ஆதரவளிப்பார் எவருமில்லை.
அவர்களின் பயிர்களையெல்லாம் பசித்தோர் உண்டனர்.
    முட்களின் நடுவே வளரும் தானியங்களையும் கூட பசியுள்ள அந்த ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்.
தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை.
    பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை.
ஆனால் மனிதனோ நெருப்பிலிருந்து பொறிகள் மேலே எழும்புவது எத்தனை நிச்சயமோ
    அவ்வாறே, தொல்லையனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால்,
    தேவனிடம் திரும்பி என் கஷ்டங்களைக் கூறியிருப்பேன்.
தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது.
    தேவன் செய்கிற அதிசயங்களுக்கு முடிவேயில்லை.
10 தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார்.
    அவர் வயல்களுக்கு தண்ணீரை அனுப்புகிறார்.
11 எளிமையானவனைத் தேவன் உயர்த்துகிறார்,
    அவர் துயரமுள்ளவனை மகிழ்ச்சியாக்குகிறார்.
12 புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை,
    அவர்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் தடுக்கிறார்.
13 ஞானமுள்ளோரையும் அவர்கள் கண்ணிகளிலேயே விழும்படி செய்து
    புத்திசாலித்தனமான அத்திட்டங்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் செய்கிறார்.
14 அத்தகைய திறமைசாலிகள் பகலிலேயே தடுமாறுகிறார்கள்.
    இருளில் தன் பாதையைக் காணத் தடுமாறுகின்றவனைப்போல, அவர்கள் நண்பகலிலும் காணப்படுகிறார்கள்.
15 தேவன் ஏழைகளைக் காப்பாற்றுகிறார்.
    திறமைசாலிகளின் கைக்கும் அவர் ஏழைகளை கப்பாற்றுகிறார்.
16 எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள்.
    நியாயமற்ற தீய ஜனங்களை தேவன் அழிக்கிறார்.

17 “தேவன் திருத்தும் மனிதன் பாக்கியவான்.
    சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னைத் தண்டிக்கும்போது முறையிடாதே.
18 தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார்.
    அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்.
19 ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார்.
    ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்!
20 பஞ்சக்காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்.
    போர்க் காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து பாதுகாப்பார்!
21 தங்கள் கூரிய நாவுகளால் ஜனங்கள் உங்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாம்.
    ஆனால் தேவன் உன்னைப் பாதுகாப்பார்.
    தீயன நிகழும்போது நீ அஞ்சத் தேவையில்லை!
22 அழிவைக் கண்டும் பஞ்சத்தைப் பார்த்தும் நீ நகைப்பாய்.
    காட்டு மிருகங்களைக் கண்டும் நீ அஞ்சமாட்டாய்.
23 உன்னுடைய உடன்படிக்கையின்படி வயலின் பாறைகளும் கூட அந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளும்.
    காட்டு மிருகங்களும் கூட உன்னோடு சமாதானம் செய்துக்கொள்ளும்.
24 உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய்.
    உனது கொத்துக்களை எண்ணிப் பார்த்து ஒன்றும் காணாமல் போகாதிருப்பதைக் காண்பாய்.
25 உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள்.
    அவர்கள் பூமியின் புற்களைப்போன்று பலராவார்கள்.
26 அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர்.
    ஆம், நீர் முதிர் வயதுவரைக்கும் வாழ்வீர்.

27 “யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம்.
    எனவே, யோபுவே, நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீயாகவே அதைக் கற்றுக்கொள்” என்று கூறினான்.