Add parallel Print Page Options

36 “எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை செய்யத் தேவையான ஞானத்தையும், அறிவையும் கர்த்தர் அந்த மனிதருக்குக் கொடுத்திருக்கிறார்” என்றான்.

பின் மோசே பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரால் திறமை வழங்கப்பட்ட பிற கலைவல்லுநர்களையும் அழைத்தான். வேலையில் உதவ விரும்பியதால் அவர்களும் ஒன்றாகக் கூடினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கையாகக் கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும் மோசே இந்த ஜனங்களுக்குக் கொடுத்தான். தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். காலைதோறும் ஜனங்கள் தங்கள் விருப்பதின்படி காணிக்கைகளை கொண்டு வந்தனர். பின்னர் கலை வல்லுநர்கள் பரிசுத்த இடத்தில் தாங்கள் செய்யும் வேலையை விட்டு மோசேயிடம் பேசுவதற்குச் சென்றார்கள். அவர்கள், “ஜனங்கள் மிகுதியாகப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்! கூடார வேலையை முடிப்பதற்குத் தேவையான பொருளைக் காட்டிலும் அதிகமான பொருள்கள் உள்ளன!” என்றார்கள்.

மோசே இந்தச் செய்தியை பாளையத்தைச் சுற்றிலும் அறிவித்து: “பரிசுத்த இடத்தின் வேலைக்கு இனிமேல் எவரும் எதையும் காணிக்கையாக தரவேண்டாம்” என்றான். இவ்வாறு ஜனங்கள் அளவுக்கதிகமாகக் கொடுப்பதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டியதாயிற்று. தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு ஜனங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.

Read full chapter