A A A A A
Bible Book List

யாக்கோபு 1 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:

விசுவாசமும் ஞானமும்

எனது சகோதர சகோதரிகளே, உங்களுக்குப் பலவகையான தொந்தரவுகள் இருக்கும். ஆனால் இவை நிகழும்போது இதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால், இத்தொந்தரவுகள் உங்களது விசுவாசத்தை சோதிக்கின்றன என நீங்கள் அறியுங்கள். இவை உங்களுக்குப் பொறுமையைத் தருகின்றது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை வெளிப்படக்கடவது. அப்பொறுமை உங்களை, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல் முழுமையும் நிறைவும் உள்ளவர்களாக ஆக்கித் தன் பணியை நிறைவு செய்யும்.

ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். ஆனால் நீங்கள் தேவனைக் கேட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அவர் மீது விசுவாசம் வேண்டும். தேவனை சந்தேகித்தல் கூடாது. சந்தேகப்படுகிறவன் கடலில் உள்ள அலைகளைப் போன்றவன். காற்று அந்த அலைகளை மேலும் கீழுமாகப் புரட்டும். 7-8 சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.

உண்மையான செல்வம்

தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். 10 மேலும் தேவன் தன்னைப் பணிவுள்ளவனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு பணக்காரச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். எப்படி? “அவன் ஒரு காட்டுப் பூவைப்போல உதிர்ந்து போவான்” என்று தேவன் சொன்னார். 11 சூரியன் உதயமானதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிறது. சூரிய வெப்பமானது செடிகளைக் காய வைக்கிறது. பூ உதிர்ந்துவிடுகின்றது. அந்த பூ அழகாக இருந்தது. ஆனால் அது வாடிப்போய் விடுகிறது. பணக்காரனும் அப்படித்தான். அவன் தன் வியாபாரத்துக்காகத் திட்டமிடும்போது இறந்துபோவான்.

தேவனிடமிருந்து சோதனைகள் வருவதில்லை

12 சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான். 13 ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை. 14 அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். 15 இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது.

16 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள். 17 எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். 18 உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்.

கவனிப்பதும் கீழ்ப்படிவதும்

19 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாகவும், கோபிப்பதில் தாமதமாகவும் இருங்கள். 20 ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது. 21 எனவே உங்களைச் சுற்றி மிகுந்த அளவில் இருக்கிற எல்லாவிதமான அழுக்கையும், தீமையையும் நீங்கள் ஒழித்துவிட்டு உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற வல்ல போதனையைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

22 தேவன் சொல்கிறபடி செய்கிறவர்களாக இருங்கள். போதனையைக் கேட்கிறவர்களாக மட்டுமே இருந்து தம்மைத் தாமே வஞ்சித்துக்கொள்கிறவர்களாக இருக்காதீர்கள். 23 ஒருவன் தேவனுடைய போதனையைக் கேட்டுவிட்டு எதுவும் செயல்படாமல் இருந்தால் அது ஒருவன் கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தைத் தானே பார்த்துக்கொள்வது போன்றது ஆகும். 24 அவன் தன்னைத் தானே பார்த்து, அந்த இடம் விட்டுப் போனபிறகு தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். இதுவும் அதைப் போன்றதுதான். 25 முழுமையான தேவனுடைய சட்டத்தை ஆழமாக ஆராய்ந்து, கேட்டு மறந்துவிடுகிறவனாக இல்லாமல் தொடர்ந்து அதைப் படித்து அதன்படி நடக்கிறவன் தான் செய்வதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறான். தேவனுடைய சட்டம் மக்களை விடுதலையடையச் செய்கிறது.

தேவனை வழிபடுகிற உண்மையான வழி

26 தெய்வ பக்தி உள்ளவன் என ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தன் நாக்கை அவன் அடக்கிக்கொள்ளவில்லையெனில், தன்னைத்தானே அவன் முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன் “தெய்வ பக்தி” பயனற்றதாக இருக்கின்றது. 27 பிதாவாகிய தேவன் தூய்மையானதும் குற்றமற்றதுமென எண்ணுகிற வழிபாடு என்பது உதவி தேவைப்படுகிற விதவைகள், அனாதைகள் ஆகியோர்மேல் அக்கறை கொள்வதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்வதுமே ஆகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes