Add parallel Print Page Options

ஞானிகளின் வருகை

யூதேயாவிலுள்ள பெத்லகேம் நகரில் இயேசு பிறந்தார். அவர் ஏரோது மன்னன் காலத்தில் பிறந்தார். அதன் பின்பு இயேசு பிறந்தவுடன், சில ஞானிகள் எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்தனர். அவர்கள் மக்களைப் பார்த்து, “புதிதாகப் பிறந்த யூதர்களின் அரசரான குழந்தை எங்கே? அவர் பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். கிழக்கு திசையில் அந்நட்சத்திரம் மேலெழுவதைக் கண்டோம். நாங்கள் அவரை வணங்க வந்துள்ளோம்” என்று சொன்னார்கள்.

ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். ஏரோது தலைமை ஆசாரியர் மற்றும் வேதபாரகரின் கூட்டத்தைக் கூட்டினான். கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் என அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில்,

“‘யூதேயாவிலுள்ள பெத்லகேமே,
    உனக்கு யூதேயாவின் ஆட்சியாளர்களுக்கிடையில் முக்கியத்துவம் உண்டு.
ஆம், உன்னிலிருந்து ஒரு பிரபு தோன்றுவார்.
    அவர் இஸ்ரவேல் என்னும் என் மக்களை வழி நடத்துவார்’ (A)

என்று தீர்க்கதரிசி வேத வாக்கியங்களில் எழுதியுள்ளார்” என்று கூறினார்கள்.

பின், கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுடன் ஏரோது இரகசியமாகப் பேசி அவர்கள் முதன் முதலில் நட்சத்திரத்தைக் கண்ட காலத்தை அவர்களிடமிருந்து அறிந்தான். ஏரோது அந்த ஞானிகளிடம், “நீங்கள் சென்று அந்தக் குழந்தையைக் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் அக்குழந்தையைக் கண்டதும் என்னிடம் வந்து சொல்லுங்கள். பின் நானும் சென்று அக்குழந்தையை வணங்க இயலும்” என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

மன்னன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஞானிகள் அங்கிருந்து செல்லும்போது அவர்கள் கிழக்கில் தாங்கள் கண்ட அதே நட்சத்திரத்தை மீண்டும் பார்த்தனர். ஞானிகள் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். நட்சத்திரம் அவர்களுக்கு முன்னாலேயே சென்று குழந்தை பிறந்த இடத்திற்கு மேலாக வந்து நின்றது. 10 நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள் மிகவும் மகிழ்ந்தனர்.

11 குழந்தை இருந்த வீட்டிற்கு ஞானிகள் வந்தனர். அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்தனர். ஞானிகள் குழந்தையைத் தாழவிழுந்து வணங்கினர். குழந்தைக்காகத் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்து வைத்தனர். அவர்கள் தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் கொடுத்தனர். 12 அதன் பின்னர் தேவன் ஞானிகளின் கனவில் தோன்றி அவர்களை ஏரோது மன்னனிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என எச்சரித்தார். எனவே, ஞானிகள் வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.

Read full chapter