நெகேமியா 6:1-9
Tamil Bible: Easy-to-Read Version
மேலும் பிரச்சனைகள்
6 பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை. 2 எனவே சன்பல்லாத்தும் கேஷேமும் எனக்கு, “நெகேமியா வா, நாம் ஒன்றாகக் கூடுவோம். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் உள்ள கெப்பிரிம் எனும் பட்டணத்தில் கூடிப்பேசுவோம்” என்னும் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர்.
3 எனவே நான்: “முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை” என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன்.
4 சன்பல்லாத்தும் கேஷேமும் அதே செய்தியை என்னிடம் நான்குமுறை அனுப்பினார்கள். ஒவ்வொருமுறையும் நான் அதே பதிலையே திரும்ப அனுப்பினேன். 5 பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது. 6 அக்கடிதத்தில்,
“ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் அரசனுக்கு எதிராகத்திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய அரசன் ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 7 ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது.
“நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா அரசனும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது.
8 எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன்.
9 எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், “யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என ஜெபம் செய்தேன்.
Read full chapter2008 by Bible League International