A A A A A
Bible Book List

நீதிமொழிகள் 23 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

— 6 —

23 ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார். எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே. அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம்.

— 7 —

செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு. ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.

— 8 —

கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு. எப்பொழுதும் அவன் அதன் விலையையே நினைத்துக்கொண்டிருக்கும் தன்மையுடையவன். அவன் உன்னிடம், “உண்ணு, பருகு” என்று கூறலாம். ஆனால் அவனது விருப்பம் உண்மையானது அல்ல. அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும்.

— 9 —

முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான்.

— 10 —

10 பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. 11 கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார்.

— 11 —

12 உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள்.

— 12 —

13 தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது. 14 அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய்.

— 13 —

15 என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன். 16 நீ சரியானவற்றைப் பேசுவதை நான் கேட்டால் என் மனதில் மிகவும் மகிழ்வேன்.

— 14 —

17 தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து. 18 எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.

— 15 —

19 என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு. 20 மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே! 21 மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.

— 16 —

22 உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு. 23 உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை. 24 நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான். 25 எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு.

— 17 —

26 என் மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் வாழ்க்கை உனக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். 27 வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள். 28 மோசமான பெண் திருடனைப்போன்று உனக்காகக் காத்திருப்பாள். பலரை அவள் பாவிகளாக்குகிறாள்.

— 18 —

29-30 நிறைய மது குடிப்பவர்களுக்கு அநேகத் தீங்கு உண்டாகிறது. தங்களுக்குள் அடித்துக்கொண்டு சண்டைகளும் விவாதங்களும் செய்வார்கள். அவர்களின் கண்கள் சிவக்கின்றன. தங்களுக்குள் சண்டையிட்டுப் புலம்பி தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர். அவர்களால் இத்துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும்.

31 மதுவைப்பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது. 32 முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது.

33 மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்க வைக்கும். உன் மனம் குழப்பமடையும். 34 நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும். 35 “அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes