A A A A A
Bible Book List

நாகூம் 3 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

நினிவேவுக்குச் கெட்டச் செய்தி

அந்த கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது மிகவும் கெட்டதாக இருக்கும்.
    நினிவே, பொய்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது.
இது மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களால் நிறைந்திருக்கிறது.
    இந்நகரம், கொன்றும், கொள்ளையடித்தும் கொண்டுவந்த ஜனங்களாலும் அதிகமாக நிறைந்துள்ளது.
நீங்கள், சவுக்குகளின் ஓசையையும்,
    சக்கரங்களின் அதிர்ச்சியையும்,
குதிரைகளின் பாய்ச்சலையும்,
    இரதங்களின் ஓடுகிற சத்தத்தையும் கேட்கமுடியும்.
குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர்.
    அவர்களின் வாள்கள் மின்னுகின்றன.
    அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன.
அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன.
    எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன.
    ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.
இவை அனைத்தும் நினிவேயால் ஏற்பட்டன.
    நினிவே, ஒரு வேசியைப் போன்றவள்.
    அவளுக்குத் திருப்தி இல்லை. அவள் மேலும் மேலும் விரும்பினாள்.
அவள் தன்னைத்தானே பல நாடுகளுக்கு விற்றாள்.
    அவள் அவர்களைத் தன் அடிமையாக்க மந்திரத்தைப் பயன்படுத்தினாள்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
    நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன்.
நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன்.
    அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.
நான் உன்மேல் அசுத்தமானவற்றை எறிவேன்.
    நான் உன்னை வெறுக்கத்தக்க முறையில் நடத்துவேன்.
    ஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்.
உன்னைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள்.
    அவர்கள், ‘நினிவே அழிக்கப்படுகிறது.
    அவளுக்காக யார் அழுவார்கள்?’ என்பார்கள்.
நினிவே, என்னால் உன்னை ஆறுதல்படுத்தும் எவரையும்
    கண்டுபிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.”

நினிவே, நீ நல்ல ஆற்றங்கரையிலுள்ள தீப்ஸ்ஸைவிடச் சிறந்ததா? இல்லை! தீப்ஸும் தன்னைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. தீப்ஸ் தன்னைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தண்ணீரை பயன்படுத்துகிறது. அவள் தண்ணீரைச் சுவரைப்போன்று பயன்படுத்துகிறாள். எத்தியோப்பியாவும் எகிப்தும் தீப்ஸ்ஸுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தன. சூடான், லிபியா தேசங்கள் அவளுக்கு உதவின. 10 ஆனால், தீப்ஸ் தோற்கடிக்கப்பட்டது. அவளது ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டனர். வீரர்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் அவளது சிறு குழந்தைகளைக் கொல்வதற்காக அடித்தனர். அவர்கள் சீட்டுப்போட்டு முக்கியமான ஜனங்களை யார் அடிமைகளாக வைத்துக்கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தனர். தீப்ஸ்ஸில் உள்ள முக்கியமானவர்கள் மீது சங்கிலிகளைப் பூட்டினார்கள்.

11 எனவே நினிவே, நீயும் ஒரு குடிக்காரனைப் போன்று விழுவாய். நீ ஒளிந்துக்கொள்ள முயல்வாய். நீ பகைவரிடமிருந்து மறைய ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவாய். 12 ஆனால் நினிவே, உனது பலமுள்ள அனைத்து இடங்களும் அத்தி மரங்களைப் போன்றவை புதியப்பழங்கள் பழுக்கும். ஒருவன் வந்து மரத்தை உலுக்குவான். அந்த அத்திப்பழங்கள் அவனது வாயில் விழும். அவன் அவற்றை உண்பான். அவைகள் தீர்ந்துவிட்டன.

13 நினிவே, உன் ஜனங்கள் அனைவரும் பெண்களைப் போன்றிருக்கின்றனர். பகை வீரர்கள் அவர்களை எடுத்துச்செல்லத் தயாராக இருப்பார்கள். உங்கள் நாட்டின் வாசல்கள் எதிரிகள் நுழைவதற்காகத் திறந்தே கிடக்கும், வாசலின் குறுக்காக கிடக்கும் மரச்சட்டங்களை நெருப்பு அழித்திருக்கிறது.

14 நீங்கள் தண்ணீரை உங்களது நகருக்குள் சேமியுங்கள். ஏனென்றால், பகைவீரர்கள் உங்கள் நகரை முற்றுகையிடுவார்கள். அவர்கள் எவரையும் தண்ணீரும் உணவும் நகருக்குள் கொண்டுசெல்ல விடமாட்டார்கள். நீங்கள் உங்களது அரண்களைப் பலப்படுத்துங்கள். அதிகமான செங்கல்களைச் செய்ய களி மண்ணைக் கொண்டு வாருங்கள். சாந்தைக் கலந்து செங்கல்களுக்கு உருவம் அளிக்கும் பொருளை பெற்றுக்கொள்ளுங்கள். 15 நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும்.

நினவே, நீ மேலும் மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய். 16 உன்னிடம் ஒவ்வொரு இடங்களுக்கும் போய் பொருட்களை வாங்குகிற வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று என்ணிக்கை உடையவர்கள். அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போன்று வந்து எல்லாம் அழியும்வரை உண்டு, பின் சென்றுவிடுவார்கள். 17 உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.

18 அசீரியாவின் அரசனே, உங்களது மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தூங்கிவிழுந்தனர். அப்பலமிக்க மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் ஆடுகள் (ஜனங்கள்) குன்றுகளின் மேல் அலைந்திருக்கின்றன. அவற்றைத் திருப்பிக் கொண்டுவர எவருமில்லை. 19 நினிவே நீ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாய். உன் காயத்தை எவராலும் குணப்படுத்த முடியாது. உனது அழிவைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவரும் கைத்தட்டுவார்கள். அவர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உன்னால் எப்பொழுதும் ஏற்பட்ட வலியை உணர்ந்தவர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes