Add parallel Print Page Options

24 “கனவின் பொருள் இதுதான், ராஜாவே, மிக உன்னதமான தேவன் அரசருக்கு இவை ஏற்படும்படி கட்டளையிட்டார். 25 ராஜாவான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.

26 “மரத்தின் தண்டையும் வேர்களையும் பூமியில் விடவேண்டும் என்பதன் பொருள் இதுதான்: உமது இராஜ்யம் உம்மிடம் திருப்பிக்கொடுக்கப்படும். உமது இராஜ்யத்தை உன்னதமான தேவன் ஆளுகிறார் என்பதை நீர் கற்கும்போது இது நிகழும். 27 எனவே, ராஜாவே, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும். நீர் பாவம் செய்வதை நிறுத்தி சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். தீமை செய்வதை நிறுத்தும். ஏழை ஜனங்களிடம் இரக்கமாயிரும். பிறகு நீர் வெற்றியுள்ளவராக இருப்பீர்.”

28 அவை யாவும் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன. 29-30 கனவுக்கண்ட 12 மாதத்திற்குப் பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள தன் அரண்மனையின் மாடியின் மேல் நடந்துகொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்துக் கொண்டு, “பாபிலோனைப் பார்! நான் இந்தப் பெரியநகரத்தைக் கட்டினேன். இது எனது அரண்மனை! எனது வலிமையினால் நான் இந்த அரண்மனையைக் கட்டினேன். நான் எவ்வளவு பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த இடத்தைக் கட்டினேன்” என்று கூறினான்.

31 இந்த வார்த்தைகள் ராஜாவின் வாயில் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அச்சத்தம் சொன்னது: “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, இவையெல்லாம் உனக்கு நிகழும். உன்னிடமிருந்து ராஜா என்னும் அதிகாரம் எடுத்துக் கொள்ளப்படும். 32 நீ ஜனங்களிடமிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவாய். நீ காட்டுமிருகங்களோடு வாழ்வாய். நீ பசுவைப்போன்று புல்லைத் தின்பாய். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்), நீ உனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும் முன் கடந்துபோகும். பிறகு உன்னதமான தேவன் மனிதரின் இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதை நீ கற்பாய். அந்த உன்னதமான தேவன் அவர் விரும்புகிறவர்களுக்கு இராஜ்யங்களைக் கொடுக்கிறார்.”

33 அக்காரியங்கள் உடனே நிகழ்ந்தன. நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பசுவைப்போன்று புல்லைத் உண்ணத்தொடங்கினான். அவன் பனியால் நனைந்தான். அவனது தலைமுடி கழுகின் சிறகுகள் போன்று நீளமாக வளர்ந்தன. அவனது நகங்கள் பறவையின் நகத்தைப்போன்று வளர்ந்தது.

34 பிறகு காலத்தின் முடிவில், நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை நோக்கிப் பார்த்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. பிறகு நான் உன்னதமான தேவனைப் போற்றினேன். நான் அவருக்கு மதிப்பையும் மகிமையையும் என்றென்றும் கொடுத்தேன்.

தேவன் என்றென்றும் ஆளுகிறார்.
    அவரது இராஜ்யம் எல்லா தலைமுறைகளுக்கும் தொடருகிறது.

Read full chapter