Add parallel Print Page Options

99 கர்த்தர் ராஜா.
    எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
    எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
    ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
    தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
    தேவன் பரிசுத்தர்.

வல்லமையுள்ள ராஜா நீதியை நேசிக்கிறார்.
    தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
    யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.

மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
    அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
    அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
    அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
    தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
    ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
    மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
    நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.