Add parallel Print Page Options

149 கர்த்தரைத் துதியுங்கள்!

கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.

தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
    சீயோனின் ஜனங்கள் அவர்களின் ராஜாவோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
    அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
    அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
    அவர் அவர்களை மீட்டார்!
தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
    படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.

ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
    அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
    அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
தேவனுடைய ஜனங்கள் அந்த ராஜாக்களுக்கும் அங்குள்ள முக்கியமான
    ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
    தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள்!