ஓசியா 3
Tamil Bible: Easy-to-Read Version
ஓசியா கோமேரை அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வாங்குகிறான்
3 பிறகு கர்த்தர் மீண்டும் என்னிடம், “கோமேருக்குப் பல நேசர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நீ தொடர்ந்து அவளை நேசி. ஏனென்றால் அதுவே கர்த்தருடைய அன்புக்கு ஒப்பானது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்நியத் தெய்வங்களை தொழுகின்றனர். அவர்கள் (உலர்ந்த) திராட்சை அப்பத்தை உண்ண விரும்புகின்றனர்” என்றார்.
2 எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன், 3 பிறகு நான் அவளிடம், “நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்” என்று சொன்னேன்.
4 இவ்வாறே, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு ராஜாவோ தலைவரோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் பலி இல்லாமலும், நினைவுக் கற்கள் இல்லாமலும் இருப்பார்கள். அவர்கள் ஏபோத் ஆடை இல்லாமலும் வீட்டுத் தெய்வங்கள் இல்லாமலும் இருப்பார்கள். 5 இதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பி வருவார்கள். பிறகு அவர்கள் தம் தேவனாகிய கர்த்தரையும் ராஜாவாகிய தாவீதையும்காண வருவார்கள். இறுதி நாட்களில் அவர்கள் கர்த்தரையும் அவரது நன்மைகளையும் பெருமைப்படுத்த வருவார்கள்.
2008 by Bible League International