எபேசியர் 1:3-14
Tamil Bible: Easy-to-Read Version
கிறிஸ்துவில் ஆவியானவரின் ஆசீர்வாதம்
3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார். 4 உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார். 5 உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே, நம்மைத் தம் பிள்ளைகளாய் கிறிஸ்து மூலமாகத் தேர்ந்தெடுக்க தேவன் முடிவு செய்துவிட்டார். தேவன் செய்ய விரும்பியதும் அதுவே ஆகும். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 6 அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற மகனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார்.
7 கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. 8 தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார். 9 தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார். 10 சரியான நேரம் வரும்போது தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தேவன் ஏற்கெனவே செய்த முடிவு. பரலோகத்திலும், பூமியிலும் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்று கூடி கிறிஸ்துவின் கீழ் இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம்.
11 நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம். அவரது விருப்பத்திற்கும், முடிவுக்கும் ஏற்றவாறு அவர் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்வார். 12 கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களில் நாமே முதல் மக்கள். நாம் தேவனின் மகிமைக்குப் புகழ் சேர்ப்போம் என்பதனால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். 13 இந்தப் பெருமை உங்களையும் சேரும். நீங்களும் உங்கள் இரட்சிப்புக்காக உண்மையான நற்செய்தியைக் கேட்டீர்கள். நீங்கள் நற்செய்தியைக் கேட்டதால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள். தேவன் தந்த அவரது வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டீர்கள். 14 தேவன் தம் மக்களுக்கு வாக்களித்தபடி நாம் பெறுவோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் உள்ளார். தேவனைச் சேர்ந்தவர்களுக்கு இது முழு விடுதலை தரும். தேவனின் மகிமைக்குப் புகழ்ச்சியைத் தேடித் தருவது தான் இவை எல்லாவற்றின் நோக்கமாக இருக்கும்.
Read full chapter2008 by Bible League International