எண்ணாகமம் 25
Tamil Bible: Easy-to-Read Version
பேயோரில் இஸ்ரவேலர்கள்
25 இஸ்ரவேல் ஜனங்கள் அகாசியாவின் அருகில் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மோவாப் பெண்களோடு பாலுறவுப் பாவத்தில் ஈடுபட்டார்கள். 2-3 மோவாப் பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துப் போய் தங்கள் போலியான தேவர்களுக்குப் பலி கொடுக்கச் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அப்போலியான தெய்வங்களை வணங்கவும் அவர்களிட்ட பலிகளை உண்ணவும் ஆரம்பித்தனர். அந்த இடத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் பாகால் பேயோர் போன்ற போலியான தேவர்களை வணங்கத் துவங்கினார்கள். இதனால் அவர்கள் மீது கர்த்தர் பெருங்கோபம் கொண்டார்.
4 கர்த்தர் மோசேயிடம், “இந்த ஜனங்களின் தலைவர்களையெல்லாம் ஒன்று சேர். பிறகு மற்றவர்கள் பார்க்கும்படி அவர்களைக் கொன்றுவிடு. அவர்களின் பிணங்களை என் பார்வையில் தூக்கில் போடு. பிறகு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் மீது நான் கோபம் கொள்ளாமல் இருப்பேன்” என்றார்.
5 எனவே மோசே இஸ்ரவேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கோத்திரங்களில், பாகால் பேயோர் போன்ற போலியான தெய்வங்களை வணங்க அழைத்துப் போனவர்களை கண்டு பிடித்து, அவர்களைக் கொல்லவேண்டும்” என்றார்.
6 அதே நேரத்தில் மோசேயும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடினார்கள். இஸ்ரவேலன் ஒருவன் மீதியானிய பெண் ஒருத்தியைத் தன் சகோதரனின் குடியிருப்பிற்கு அழைத்துப் போனதை மோசேயும் மற்ற தலைவர்களும் பார்த்து மிகவும் வருத்தப்பட்டனர். 7 இதை ஆரோனின் பேரனும், எலெயாசாரின் மகனுமான பினெகாசும் பார்த்தான். ஒரு பெண்ணைக் கூடாரத்திற்கு இஸ்ரவேலன் அழைத்துச் செல்வதை அந்த ஆசாரியன் பார்த்ததும் தன் ஈட்டியை எடுத்துக்கொண்டான். 8 அவனும் அக்கூடாரத்திற்குள் பின் தொடர்ந்து சென்றான். அந்த ஈட்டியால் இஸ்ரவேலனையும் மீதியானியப் பெண்ணையும் கூடாரத்திலேயே கொன்றான். இருவரையும் ஒருசேர ஈட்டியால் குத்திக் கொன்றுவிட்டான். அதே நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் நோய் பரவிவிட்டது. பினெகாஸ் அவர்களைக் கொன்றதும் நோய் நிறுத்தப்பட்டது. 9 அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள்.
10 கர்த்தர் மோசேயை நோக்கி, 11 “நான் ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமே சொந்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆரோனின் குமாரனான எலெயாசாரின் குமாரன் பினெகாஸ் இஸ்ரவேல் ஜனங்களை என் கோபத்திலிருந்து காப்பாற்றினான். எனவே, நான் அவர்களைக் கொல்லவில்லை. 12 நான் அவனோடு சமாதான உடன்படிக்கைச் செய்துகொள்வேன் என்று பினெகாசிடம் கூறுங்கள். 13 அவனும் அவனது குடும்பத்திலுள்ளவர்களும், அவனுக்குப் பின் வாழும் சந்ததியினரும் எப்போதும் ஆசாரியர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு தேவன் மீது பலமான பக்தியுள்ளது. இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் செயல்களை அவன் செய்துவிட்டான்” என்றார்.
14 மீதியானியப் பெண்ணோடு கொல்லப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. இவன் சாலூவின் குமாரன். இவன் சிமியோன் கோத்திரத்திலுள்ள தலைவன். 15 கொல்லப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் சூரின் குமாரத்தி. சூர் மீதியானியக் கோத்திரத்தின் தலைவனாகவும். குடும்பத் தலைவனாகவும் விளங்கினான்.
16 கர்த்தர் மோசேயிடம் 17 “மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும். 18 அவர்கள் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் பகைக்கின்றனர். பேயோரில் அவர்கள் தந்திரம் செய்தனர். அவர்கள் கஸ்பி என்ற பெண் மூலம் உங்களிடம் தந்திரம் செய்தனர். அவள் மீதியானிய தலைவரின் குமாரத்தி. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும் நோய் வந்தபோது அவள் கொல்லப்பட்டாள். ஜனங்கள் தந்திரத்திற்குட்பட்டு பாகால்பேயார் போன்ற பொய்யான தேவர்களை வணங்கியதால் இந்நோய் ஏற்பட்டது” என்றார்.
2008 by Bible League International