Add parallel Print Page Options

21 எனவே அவர்கள் நாட்டைப் பற்றித் தெரிந்துக்கொள்ளச் சென்றனர். பின் அவர்கள் சீன் பாலைவனம் முதல் ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை சுற்றிப் பார்த்தனர். 22 நெகேவ் வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர். தெற்கேயும் எபிரோன் வரை சென்றார்கள். (எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.) அங்கே ஆனாக்கின் சந்ததியாகிய அகீமானும், சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். 23 பிறகு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை சென்றனர். அங்கே அவர்கள் திராட்சைக் கொடியில் ஒரு குலையை அறுத்துக்கொண்டனர். அதனை ஒரு கம்பிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் மாதுளம் பழங்களிலும், அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தனர். 24 அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள்.

25 அவர்கள் 40 நாட்கள் அந்த தேசத்தை நன்கு சுற்றி பார்த்தனர். பிறகு அவர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பி வந்தனர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் பாரான் பாலைவனத்தில் காதேஷ் என்ற இடத்துக்கு அருகில் தம் கூடாரங்களை அடித்திருந்தனர். அவர்கள் மோசே, ஆரோன் மற்றும் மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தனர். அந்நாட்டிலிருந்து கொண்டு வந்த பழங்களைக் காட்டினார்கள். 27 மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ; 28 ஆனால் அங்கு ஜனங்கள் மிகவும் பலமுள்ளவர்களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை, மிகவும் பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் ஜனங்களையும் கண்டோம். 29 அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்கிறார்கள்” என்றனர்.

30 மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.

31 ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர். 32 மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பலமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள். 33 அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள்.

Read full chapter