Add parallel Print Page Options

17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இக்கதையைக் கூறு. இதன் பொருள் என்னவென்று கேள். அவர்களிடம் சொல்:

“‘ஒரு பெரிய கழுகு (நேபுகாத்நேச்சார்) பெருஞ் சிறகுகளுடன் லீபனோனுக்கு வந்தது.
    அக்கழுகு புள்ளிகளைக்கொண்ட இறகுகளை கொண்டிருந்தது.
அக்கழுகு பெரிய கேதுரு மரத்தின் உச்சியை (லீபனோன்) உடைத்தது;
    கானானுக்குக் கொண்டுவந்தது.
    கழுகு வியாபாரிகளின் பட்டணத்திற்கு கிளையைக் கொண்டுவந்தது.
பிறகு கழுகு கானானிலிருந்து சில விதைகளை (ஜனங்கள்) எடுத்தது.
    அது அவற்றை நல்ல மண்ணில் நட்டுவைத்தது.
    அது நல்ல ஆற்றங்கரையில் நட்டது.
அவ்விதைகள் வளர்ந்து திராட்சை கொடியானது.
    இது ஒரு நல்ல கொடி.
இக்கொடி உயரமாக இல்லை.
    ஆனால் அது படர்ந்து பெரும் இடத்தை அடைத்தது.
அக்கொடிகளுக்கு வேர்கள் வளர்ந்தன.
    சிறு கொடிகள் மிக நீளமாக வளர்ந்தன.
இன்னொரு பெரிய கழுகு தன் பெருஞ் சிறகுடன் இக்கொடியைப் பார்த்தது.
    அக்கழுகுக்கு நிறைய இறகுகள் இருந்தன.
அத்திராட்சைக் கொடி,
    இக்கழுகு தன்னைப் பராமரிக்க வேண்டும் என்று விரும்பியது.
எனவே இக்கழுகை நோக்கித் தன் வேர்களை வளர்த்தது.
    அதன் கிளைகளும் இக்கழுகை நோக்கி நீண்டன.
    கிளைகள் தன்னை நட்டுவைத்த நிலத்தை விட்டு வெளியே வளர்ந்தன.
    திராட்சைக் கொடி இக்கழுகு தனக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என விரும்பியது.
திராட்சைக் கொடியானது நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
ஏராளமான தண்ணீரின் அருகில் இது நடப்பட்டிருந்தது.
    அதில் கிளைகளும் பழங்களும் வளர்ந்திருந்தன.
    அது நல்ல திராட்சைக் கொடியாக இருந்திருக்கலாம்.’”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்:
“அக்கொடி தொடர்ந்து செழித்து வளரும் என்று நினைக்கிறாயா?
    இல்லை! புதிய கழுகு திராட்சைக் கொடியைப் பூமியில் இருந்து பிடுங்கும்.
அப்பறவை கொடியின் வேர்களை உடைக்கும்.
    அது எல்லா திராட்சைகளையும் உண்ணும்.
பிறகு புதிய இலைகள் வாடி உதிரும்.
    அக்கொடி மிகவும் பலவீனமாகும்.
பலம் வாய்ந்த புயத்தோடும் வல்லமை வாய்ந்த ஜனங்களோடும் வந்து
    அதனைப் பிடுங்கிப்போடத் தேவையில்லை.
10 கொடியை நட்ட இடத்தில் அது வளருமா?
    இல்லை! சூடான கிழக்குக் காற்று வீசும்.
    அதில் அது வாடி உலர்ந்துபோகும்.
    அது நட்டுவைத்த இடத்திலேயே வாடிப் போகும்.”

சிதேக்கியா ராஜா தண்டிக்கப்படுதல்

11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இக்கதையைக் விவரித்துக் கூறு. அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடம் இவற்றைச் சொல். முதல் கழுகு என்பது பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். அவன் எருசலேமிற்கு வந்தான். ராஜாவையும் தலைவர்களையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோனுக்குக் கொண்டு போனான். 13 பிறகு நேபுகாத்நேச்சார் அரச குடும்பத்திலுள்ள ஒருவனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டான். நேபுகாத்நேச்சார் அம்மனிதனை வற்புறுத்தி ஒரு வாக்குறுதியைச் செய்ய வைத்தான். எனவே அவன் நேபுகாத்நேச்சாருக்கு உண்மையாக இருப்பதாக வாக்களித்தான். நேபுகாத்நேச்சார் அவனை யூதாவின் புதிய ராஜாவாக ஆக்கினான், பிறகு அவன் ஆற்றல்மிக்க மனிதர்களையெல்லாம் யூதாவை விட்டு வெளியேற்றினான். 14 எனவே யூதா ஒரு பலவீனமான அரசானது. நேபுகாத்நேச்சாருக்கு எதிராகத் திரும்ப முடியாதுபோயிற்று. புதிய ராஜாவோடு செய்த ஒப்பந்தத்தை ஜனங்கள் பின்பற்றும்படி வற்புறுத்தப்பட்டனர். 15 ஆனால் புதிய ராஜா எப்படியாவது நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்ய விரும்பினான்! அவன் உதவி வேண்டி எகிப்துக்குத் தூதுவர்களை அனுப்பினான். புதிய ராஜா ஏராளமான குதிரைகளையும், வீரர்களையும் கேட்டான். இப்பொழுது, யூதாவின் புதிய ராஜா வெற்றி பெறுவான் என்று நினைக்கிறீர்களா? இப்புதிய ராஜா போதிய ஆற்றலைப்பெற்று ஒப்பந்தத்தை உடைத்து தண்டனையில் இருந்து தப்புவான் என்று நினைக்கின்றீர்களா?”

16 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரின்மேல் உறுதியாகச் சொல்கிறேன்! புதிய ராஜா பாபிலோனில் மரிப்பான். நேபுகாத்நேச்சார் இப்புதியவனை யூதாவின் ராஜாவாக ஆக்கினான். ஆனால் இவன் தான் நேபுகாத்நேச்சாரோடுச் செய்த வாக்குறுதியை உடைத்தான். இப்புதிய ராஜா ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். 17 எகிப்தின் ராஜா யூதாவின் ராஜாவைக் காப்பாற்ற முடியாது. அவன் வேண்டுமானால் ஏராளமான வீரர்களை அனுப்பலாம். ஆனால் எகிப்தின் பெரும் பலம் யூதாவைக் காப்பாற்றாது. நேபுகாத்நேச்சாரின் படை நகரத்தைக் கைப்பற்றுவதற்காக மண் சாலைகளையும், முற்றுகைச் சுவர்களையும் கட்டுவார்கள். ஏராளமானவர்கள் மரிப்பார்கள். 18 ஆனால் யூதாவின் ராஜா தப்பிக்கமாட்டான். ஏனென்றால் அவன் தன் ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். அவன் நேபுகாத்நேச்சாரோடு செய்த வாக்குறுதியை உடைத்தான்.” 19 எனது ஆண்டவரான கர்த்தர் இந்த வாக்குறுதியைச் செய்கிறார்: “எனது உயிரின்மேல், நான் யூதாவின் ராஜாவைத் தண்டிப்பதாக வாக்குரைத்தேன். ஏனென்றால் அவன் எனது எச்சரிக்கையை அசட்டை செய்தான். அவன் எங்கள் ஒப்பந்தத்தை உடைத்தான். 20 நான் எனது வலையைப் போடுவேன். அவன் அதில் அகப்படுவான். நான் அவனை பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அவன் அங்கே தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் எனக்கு எதிராகத் திரும்பினான். 21 நான் அவனது படையை அழிப்பேன். நான் அவனது சிறந்த போர் வீரர்களை அழிப்பேன், தப்பிப் பிழைப்பவர்களை நான் காற்றில் சிதறடிப்பேன். பிறகு நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். நான் இவற்றை உங்களுக்குச் சொன்னேன். 22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்:

“நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன்.
    நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன்.
    நானே அதனை உயரமான மலையில் நடுவேன்.
23 நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன்.
    அக்கிளை மரமாக வளரும்.
அது கிளைகளாக வளர்ந்து கனிதரும்.
    அது அழகான கேதுரு மரமாகும்.
பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும்.
    பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.

24 “பிறகு மற்ற மரங்கள்,
    நான் உயரமான மரங்களைத் தரையில் வீழ்த்துவேன்,
    குட்டையான மரங்களை உயரமாக வளர்ப்பேன் என்பதை அறியும்.
நான் பச்சைமரங்களை உலரச் செய்வேன்.
    உலர்ந்த மரங்களைத் தளிர்க்கச் செய்வேன்.
நானே கர்த்தர்.
    நான் சிலவற்றைச் செய்வதாகச் சொன்னால் செய்வேன்!”