A A A A A
Bible Book List

உபாகமம் 25 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

25 “இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அதனால், அவர்கள் தங்கள் வழக்கைத் தீர்க்க நீதிமன்றம் வந்தால் நீதிபதிகள் அவ்விருவரில் யார் நிரபராதி? யார் குற்றவாளி? என்று முடிவு செய்வர். குற்றவாளி சாட்டையால் அடிக்கப்பட வேண்டியவன் என நீதிபதி முடிவு செய்தால், நீதிபதி அக்குற்றவாளியை கீழே முகம் குப்புறப் படுக்கச்செய்து வேறு ஒருவரை வைத்து தம்முன்னால் அவனை அடிக்கச்செய்வார். அந்த அடிகளின் எண்ணிக்கை அவனது குற்றத்திற்கேற்ப அமையும். நாற்பது அடிகளுக்குமேல் அவனை அடிக்க கூடாது. அவ்வாறு நாற்பது அடிகளுக்குமேல் அடித்தால், அவனுடைய உயிர் உங்களுக்கு முக்கியமல்ல என்பது வெளிப்படும். எனவே, நாற்பது அடிகளுக்கு மேல் ஒருவனை அடிக்காதீர்கள்.

“தானியக்களத்தில் போரடிக்கிற ஒரு மாட்டை, அது தின்னாதபடி அதன் வாயைக் கட்டாதீர்கள்.

“இரு சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்துவர, அதில் ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாது மரித்துவிடுவான் என்றால், மரித்தவனின் மனைவியை அந்தக் குடும்பத்தைவிட்டு வெளியே இருக்கிற வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்கக் கூடாது. அவளது கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, அவளுடன் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை, அவளது கணவனின் சகோதரர் அவளுக்குச் செய்ய வேண்டும். பின் அவர்களது முதல் குழந்தைக்கு மரித்த சகோதரனின் பெயரை வைத்து, மரித்தவனின் பெயர் இஸ்ரவேலை விட்டு அழியாதபடி காத்திடவேண்டும். ஆனால் அவன் அவனது சகோதரனின் மனைவியைத் தன் மனைவியாக எடுக்க விரும்பவில்லை என்றால், பின் அவள் ஊர் கூடும் பஞ்சாயத்திற்குச் சென்று ஊர்த் தலைவர்களிடம், ‘என் கணவனின் சகோதரர் அவரது சகோதரரின் பெயர் இஸ்ரவேலில் நிலைத்து நிற்கச் செய்ய மறுக்கிறார். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு இவர் செய்யவில்லை’ என்று முறையிடவேண்டும். பின் ஊர்த் தலைவர்கள் அவனை அழைத்துப் பேசுவார்கள். அதற்கு அவன், ‘நான் அவளை மனைவியாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று பிடிவாதமாக் கூறினால், பின் அவனது சகோதரன் மனைவி ஊர்த் தலைவர்கள் எதிரில் அவனருகில் வந்து, அவனது பாதரட்சைகளை அவன் கால்களிலிருந்து கழற்றி, பின் அவன் முகத்தில் துப்புவாள். அவள், ‘தன் சகோதரன் மனைவியை ஏற்று அவன் குடும்பத்தைக் கட்டிக்காக்கத் தவறியவனுக்கு இப்படியே செய்யவேண்டும்’ என்று கூறவேண்டும். 10 பின் இஸ்ரவேலில் இப்படிப்பட்டவனின் வீடு, ‘செருப்பு கழற்றிப் போடப்பட்டவன் வீடு’ என்று அழைக்கப்படும்.

11 “இருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஒருவனது மனைவி தன் கணவனை அடிக்கின்றவனிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்து அங்கு வந்து தன் கையை நீட்டி அடிக்கிறவனின் அந்தரங்க உறுப்பை நசுக்கி இழுக்கக்கூடாது. 12 அவள் இப்படிச் செய்தால், அவள் கையைத் துண்டித்துவிட வேண்டும். அவளிடம் இரக்கம் காட்டாதீர்கள்.

13 “ஏமாற்றும் நோக்கத்துடன் ஜனங்களை ஏமாற்ற கூடுதலான அல்லது குறைவான எடைக் கற்களைப் பயன்படுத்தாதீர்கள். 14 உங்கள் வீடுகளில் அதிகமான அல்லது குறைவான அளவுக் கருவிகளை வைத்திருக்காதீர்கள். 15 சரியானதாகவும் பிழையற்றதாகவும் உள்ள எடைக்கற்களையும், அளவு கருவிகளையுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்போது நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீண்ட காலம் வாழலாம். 16 உங்கள் தேவனாகிய கர்த்தர், ஏமாற்றும் எண்ணத்துடன் தவறான எடைக்கற்களையும், அளவுக் கருவிகளையும் பயன்படுத்துபவர்களை வெறுக்கின்றார். ஆம், தேவன் தவறு செய்கின்ற அனைவரையும் வெறுக்கின்றார்.

அமலேக்கியர்கள் அழிக்கப்பட வேண்டும்

17 “எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் அமலேக்கிய ஜனங்கள் உங்களுக்கு செய்ததை நினைத்துப் பாருங்கள். 18 அந்த அமலேக்கிய ஜனங்கள் நமது தேவனை மதிக்காமல், நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் இருந்தபொழுது உங்களைத் தாக்கினார்கள். அவர்கள் உங்கள் ஜனங்களில் மெதுவாக எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்தவர்களைத் தாக்கி வெட்டிக் கொன்றார்கள். 19 அதனால் நீங்கள் இந்த அமலேக்கியர்களின் நினைவே இந்த உலகத்தில் இருக்காமல் அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற இந்த தேசத்தில், உங்களைச் சுற்றியிருக்கும் உங்கள் எதிரிகளை எல்லாம் அழித்து உங்களை இளைப்பாறச் செய்கையில், அமலேக்கியர்களை அழித்துவிட வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes