உபாகமம் 15:1-11
Tamil Bible: Easy-to-Read Version
கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு
15 “ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும். 2 நீங்கள் செய்யவேண்டிய முறையாவது: ஒவ்வொருவரும் தான் மற்ற இஸ்ரவேலருக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை ரத்து செய்துவிட வேண்டும். அவன் மற்ற இஸ்ரவேல் சகோதரனிடம் அந்தப் பணத்தை திரும்ப தன்னிடம் செலுத்துமாறு கேட்கக்கூடாது. ஏனென்றால், கர்த்தர் உங்களுக்குக் கூறியதின்படி அந்தக் கடனை அவ்வாண்டிலேயே ரத்து செய்திட வேண்டும். 3 நீங்கள் அந்நியர்களுக்குக் கொடுத்த கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்கலாம். ஆனால், உன் இஸ்ரவேல் சகோதரனிடம் அவ்வாறு கேட்கக்கூடாது. 4 உங்கள் நாட்டில் ஏழை ஜனங்கள் யாரும் இருக்கக் கூடாது. ஏனென்றால், கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார். 5 ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் மாத்திரம் இது நடக்கும். நான் இன்று உங்களுக்குச் சொன்ன தேவனுடைய ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும். 6 பின்பு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால், நீங்கள் பல ஜாதிகளுக்கு கடன் கொடுப்பீர்கள். ஆனால், நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்கும் அவசியம் உங்களுக்கு இருக்காது. நீங்கள் அவர்களை ஆளலாம். அவர்கள் யாரும் உங்களை ஆள இயலாது.
7 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள் யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது. 8 நீங்கள் அவனுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடன் கொடுத்து உதவவேண்டும்.
9 “கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராக கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார்.
10 “அந்த ஏழை நபருக்குத் தாராளமாகக் கொடுங்கள். அவர்களுக்குக் கொடுப்பதை இழிவாகக் கருதாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இந்த நற்செயலைச் செய்வதால் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிப்பார். 11 தேசத்திலே ஏழை எளியவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதனால் தான் உன் தேசத்தில் உள்ள ஏழை எளிய சகோதரனுக்கு நீங்கள் உதவத் தயாராக இருக்கவேண்டுமென நான் கட்டளையிடுகிறேன். அவர்களுக்குத் தேவைப்படும்போது கொடுங்கள்.
Read full chapter2008 by Bible League International