அப்போஸ்தலர் 16:16-24
Tamil Bible: Easy-to-Read Version
சிறையில் பவுலும் சீலாவும்
16 ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். 17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். 18 அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று.
19 அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். 20 தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். 21 நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.
22 பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். 23 அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். 24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.
Read full chapter2008 by Bible League International