எபிரேயர் 6:1-8
Tamil Bible: Easy-to-Read Version
6 ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம். 2 ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும். 3 தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.
4-6 கிறிஸ்துவின் வழியிலிருந்து விலகிய மக்களை மீண்டும் அவ்வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியுமா? உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்று தேவனுடைய செய்தியையும் வர இருக்கிற காலத்தின் வல்லமையையும் அவர்கள் ருசித்திருக்கிறார்கள். மேலும் அவை மிக நல்லவை என அவர்கள் தமக்குத்தாமே கண்டுகொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகினார்கள். மீண்டும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்.
7 அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும். 8 ஆனால் அந்த நிலம் முட்களையும் பூண்டுகளையும் வளர்த்தால் அது பயனற்றதாகும். அந்நிலம் அபாயகரமானது. தேவன் அதனை சபிப்பார். அது நெருப்பால் அழிக்கப்படும்.
Read full chapter2008 by Bible League International