Add parallel Print Page Options

பாவப்பரிகார நாள்

16 ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம், “உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்!

“ஆரோன் பாவப்பரிகார நாள் அன்று மிகவும் பரிசுத்தமான அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன் ஒரு காளையைப் பாவப் பரிகார பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை தகன பலியாகவும் செலுத்திவிட வேண்டும். ஆரோன் தண்ணீரில் தன் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். பின் அவன் வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோன் பரிசுத்த சணல் நூல் சட்டையை அணிந்து இடுப்பில் சணல் நூல் சல்லடத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும். சணல் நூல் தலைப் பாகையையும், சணல் நூலால் ஆன இடைக் கச்சையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவை பரிசுத்தமான ஆடைகள்.

“ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பாவப்பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் தகன பலிக்காக ஒரு ஆட்டுக் காடாவையும் வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு ஆரோன் காளையைப் பாவப்பரிகார பலியாக செலுத்த வேண்டும். இந்தப் பாவப்பரிகார பலி அவனுக்குரியது. இதனை ஆரோன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுத்திகரிப்பு செய்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்.

“பிறகு ஆரோன் இரு வெள்ளாட்டுக் கடாக்களையும் கர்த்தருக்கு முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டு வரவேண்டும். பின் கடாக்களுக்காகச் சீட்டுப்போட வேண்டும். ஒரு சீட்டு கர்த்தருக்குரியது. இன்னொரு சீட்டு போக் காட்டுக்கு உரியது.

“பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவை கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும். 10 ஆனால் போக்காடாகச் சீட்டுள்ள கடாவையும் கர்த்தருக்கு முன் கொண்டு வர வேண்டும். பின் அந்தக் கடாவை உயிரோடு வனத்துக்குத் துரத்திவிட வேண்டும். இது ஜனங்களைச் சுத்திகரிப்புச் செய்யும்.

11 “பிறகு ஆரோன் காளையைத் தனக்குரிய பாவப்பரிகார பலியாகச் செலுத்தி, தன்னையும் தனது குடும்பத்தாரையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். அவனே தனக்கான பாவப்பரிகார பலியாக அக்காளையைக் கொல்ல வேண்டும். 12 பிறகு கர்த்தரின் சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்புத் தணலினால் தூபகலசத்தை நிரப்ப வேண்டும். பொடியாக்கப்பட்ட நறுமணப் பொருட்களை தன் கைப்பிடி நிறைய எடுத்து திரைக்கு உட்புறமாகக் கொண்டு வர வேண்டும். 13 அவன் கர்த்தரின் சந்நிதியில் நறுமணப் பொருட்களைப் போட வேண்டும். அப்புகையானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்தை மூடும் அளவிற்கு போட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரோன் மரிக்கமாட்டான். 14 ஆரோன் கொல்லப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதனை விரலால் தொட்டுக் கீழ்ப்புறமாக நின்று கிருபாசனத்தின்மேல் தெளிக்க வேண்டும். இவ்வாறு ஏழுமுறை அவன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும்.

15 “பிறகு ஆரோன் ஜனங்களின் பாவப் பரிகார பலிக்கான வெள்ளாட்டைக் கொன்று, அதன் இரத்தத்தைத் திரைக்குப் பின்னால் உள்ள அறைக்குக் கொண்டு வர வேண்டும். காளையின் இரத்தத்தைச் செய்தது போன்றே இதனையும் செய்ய வேண்டும். அவன் அந்த இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பும் தெளிக்க வேண்டும். 16 இவ்வாறு ஆரோன் மிகவும் பரிசுத்தமான இடத்தைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருடைய தீட்டிற்காகவும், பாவங்களுக்காகவும் ஆரோன் இதனையெல்லாம் செய்ய வேண்டும். ஆரோன் இதனை ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளே செய்ய வேண்டும்.

17 “அவர்களுடைய தீட்டுகளின் மத்தியிலிருக்கிற மிகப் பரிசுத்தமான இடத்தில் இச்சடங்குகளையெல்லாம் ஆரோன் செய்யும்போது எவரும் ஆசரிப்புக் கூடாரத்தில் நுழையக் கூடாது. ஆரோன் வெளியே வந்த பிறகுதான் எவரும் நுழைய வேண்டும். இவ்வாறு ஆரோன் தன்னையும், தன் குடும்பத்தாரையும், இஸ்ரேவேல் ஜனங்களையும் சுத்தம் செய்கிறான். 18 பிறகு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின் அருகில் வரவேண்டும். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் கொம்புகளில் தடவ வேண்டும். 19 தன் விரலினால் அந்த இரத்தத்தைத் தொட்டு ஏழுமுறை அதன்மேல் தெளிக்க வேண்டும். அதனை இஸ்ரவேல் ஜனங்களின் தீட்டுகள் நீங்கும்படி சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த வேண்டும்.

20 “ஆரோன் மிகப் பரிசுத்தமான இடத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவான். பிறகு ஆரோன் உயிருள்ள வெள்ளாட்டை கர்த்தருக்கு முன் கொண்டு வந்து 21 தனது இரு கைகளையும் அதன் தலைமீது வைப்பான். பிறகு இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களையும் குற்றங்களையும் அறிக்கையிட்டு அந்த வெள்ளாட்டின் தலையிலே சுமத்துவான். பின் அதனை அதற்கு நியமிக்கப்பட்ட ஆள் மூலம் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவான். 22 அந்தக் கடாவானது வனாந்திரத்திற்கு அனைவரது பாவங்களையும் எடுத்து சென்றுவிடுகிறது. அதனைக் காட்டிலே விட்டுவிட்டு அந்த ஆள் வந்துவிடுவான்.

23 “பிறகு ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவான். பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது அவன் அணிந்திருக்கும் மெல்லிய பஞ்சாடைகளை நீக்கி அவைகளை அங்கேயே வைத்துவிட வேண்டும். 24 ஒரு பரிசுத்தமான இடத்தில் தனது உடல் முழுவதையும் தண்ணீரால் கழுவி, பிறகு வேறு சிறப்பு ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும். அதன்பின் வெளியே வந்து தனது மற்றும் ஜனங்களின் தகன பலிகளைச் செலுத்தி தன்னையும் ஜனங்களையும் பரிசுத்தமாக்க வேண்டும். 25 பின் பாவப் பரிகார பலியின் கொழுப்பை பலிபீடத்தின் மேல் எரிப்பான்.

26 “போக்காடாகிய கடாவைக் கொண்டு போய் வனாந்திரத்திலே விட்டவன் ஆடைகளைத் துவைத்துக் குளித்துவிட்டு முகாமுக்குள் வரவேண்டும்.

27 “பாவப்பரிகார பலிக்குரிய காளையையும் வெள்ளாட்டையும் முகாமிற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும். (அவற்றின் இரத்தத்தை மட்டும் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுப் போய் அதனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.) தோல்கள், உடல்கள், கழிவுகள் அனைத்தையும் ஆசாரியன் நெருப்பிலே போட்டு எரிக்கவேண்டும். 28 எரித்தவன் ஆடையைத் துவைத்து தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவிய பின்னரே கூடாரத்திற்குள் நுழைய வேண்டும்.

29 “இந்தச் சட்டங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்கும். ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் எவ்வுணவையும் நீங்கள் உண்ணவோ, ஒரு வேலையும் செய்யவோ கூடாது. உங்கள் தேசத்தில் வசிக்கும் உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் கூட எவ்வேலையும் செய்யக்கூடாது. 30 ஏனென்றால் ஆசாரியர்கள் அந்நாளில் வந்து உங்களைச் சுத்திகரிப்பு செய்து உங்கள் பாவங்களைப் போக்குவார்கள். பிறகு நீங்கள் கர்த்தருக்கு முன் தீட்டு இல்லாமல் இருப்பீர்கள். 31 இந்நாள் சிறப்பான ஓய்வு நாளாகும். அன்று உணவு எதையும் உட்கொள்ளாமல் உங்கள் மனதில் தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறை என்றென்றும் இருக்கும்.

32 “தேவனுடைய அபிஷேகம் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசாரியனே பாவப்பரிகாரம் செய்யத் தகுந்தவன். தனது தந்தைக்குப் பிறகு தலைமை ஆசாரியனாகப் பணி செய்யும் உரிமையைப் பெற்றவன் இவன். ஆசாரியன் பரிசுத்தமான சணல் நூல் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். 33 மிகப் பரிசுத்தமான இடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் மற்ற ஆசாரியர்களையும், இஸ்ரவேல் ஜனங்களையும் சுத்தப்படுத்துவான். 34 இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.

மிருகங்களைக் கொல்வது மற்றும் உண்பது பற்றிய விதிகள்

17 கர்த்தர் மோசேயிடம் “நீ ஆரோனுடனும், அவனது மகன்களோடும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசி, கர்த்தர் என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதைக் கூறு: ஒரு இஸ்ரவேலன் ஒரு காளையையோ, அல்லது ஒரு செம்மறியாட்டையோ அல்லது வெள்ளாட்டையோ முகாமுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கொல்லலாம். அவன் அந்த மிருகத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அவன் சிந்தியவனாகிறான். எனவே, தனது அன்பளிப்பை கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் அம்மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்லவில்லையெனில் அவன் தனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும். விதிகள் இவ்வாறு இருப்பதால் ஜனங்கள் தங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் வயல்களில் கொல்கிற மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு முன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். கொழுப்பை நறுமணமிக்க வாசனையாக எரிக்க வேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். தாங்கள் தவறாகப் பின்பற்றிய பொய்த் தேவர்களுக்கு இனிமேல் அவர்கள் எவ்வித பலிகளும் இடாமல் இருக்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொய்த் தேவர்களைப் பின்பற்றினால் ஒரு வேசியைப் போன்று இருப்பார்கள். இவ்விதிகள் நிரந்தரமானவை.

“ஜனங்களிடம் சொல்லுங்கள், இஸ்ரவேல் குடிமக்களோ அல்லது உங்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களோ தகன பலியையோ அல்லது வேறு பலிகளையோ ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு கர்த்தருக்கு அளிக்க வரவேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட்டுப் போவார்கள்.

10 “இரத்தத்தைச் சாப்பிடுகிற எவருக்கும் தேவனாகிய நான் எதிராக இருக்கிறேன். அவன் இஸ்ரவேல் குடிமகனாகவோ, அல்லது உங்களோடு குடியிருக்கும் அயல் நாட்டுக்காரனாகவோ இருக்கலாம். நான் அவர்களை மற்ற ஜனங்களிடம் இருந்து ஒதுக்கிவிடுவேன். 11 ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. 12 உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது.

13 “எவராவது உண்ணத்தக்க பறவையையோ, மிருகத்தையோ பிடித்துக்கொன்றால் அதன் இரத்தத்தைத் தரையிலே ஊற்றி மண்ணால் மூட வேண்டும். 14 இறைச்சியில் இரத்தம் இருந்தால் இறைச்சியில் மிருகத்தின் உயிர் இருப்பதாகப் பொருள். இறைச்சியில் இரத்தம் இருந்தால் அதை உண்ணாதீர்கள். இரத்தத்தோடு உண்ணுகிற எவனும் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்படுவான்.

15 “இஸ்ரவேலராகிய நீங்களும், உங்களோடு வசிக்கும் அயலார் எவரும் தானாக மரித்துப்போன மிருகத்தையோ, வேறு மிருகத்தாலே கொல்லப்பட்ட மிருகத்தையோ உண்ணக் கூடாது, அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். அப்படி உண்பவன் மாலைவரை தீட்டாயிருப்பான். மாலையில் அவன் தன் உடையைத் துவைத்து தண்ணீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். 16 அவன் தனது ஆடையைத் துவைக்காவிட்டாலோ, தண்ணீரால் உடலைக் கழுவாவிட்டாலோ அவன் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று கூறினார்.

பாலியல் உறவுகள் தொடர்பான விதிகள்

18 மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: நானே தேவனாகிய கர்த்தர் எகிப்திலிருந்த உங்களை நான் கானானுக்கு வழி நடத்தினேன். அங்கு செய்துவந்த செயல்களை எல்லாம் இங்கு செய்யக் கூடாது. நான் உங்களை கானான் தேசத்திற்கு நடத்திச் செல்கிறேன். அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனவே நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிகிறவனே உண்மையில் நீடித்து வாழ்வான். நானே கர்த்தர்.

“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் பாலின உறவு கொள்ளக் கூடாது. நானே கர்த்தர்!

“நீங்கள் உங்கள் தந்தையோடும் தாயோடும் பாலின உறவு தொடர்புகொள்ளக் கூடாது. அந்தப் பெண் உனது தாய். எனவே நீ அவளோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

“நீங்கள் உங்கள் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தைக்கோ, தாய்க்கோ பிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம். அவள் உனது வீட்டிலே பிறந்தவளாகவோ வேறு இடத்தில் பிறந்தவளாகவோ இருக்கலாம்.

10 “நீ உன் பேத்தியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் உங்களில் ஒரு பகுதியானவர்கள்.

11 “உனது தந்தைக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தவளாக இருந்தாலும் அவள் உனது சகோதரிதான். நீ அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

12 “உன் தந்தையின் சகோதரியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தையோடு நெருங்கிய உறவு உடையவள். 13 நீ உனது தாயின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் உனது தாயின் நெருங்கிய உறவினள். 14 நீ உனது தந்தையின் சகோதரனோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நீ அவரது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் உனது அத்தை அல்லது சித்தி அல்லது பெரியம்மாள்.

15 “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது மகனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

16 “நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

17 “நீ தாய்-மகள் இருவரோடும் பாலின உறவு கொள்ளக்கூடாது. அதோடு அவளது பேத்தியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பேத்தி அவளது மகளின் மகளாகவும் மகனின் மகளாகவும் இருக்கலாம். அவளது பேத்தி என்றால் அவளுக்கு நெருக்கமான உறவினள். அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது முறை கெட்ட செயல்.

18 “உனது மனைவி உயிரோடு இருக்கும்போது அவளது தங்கையை அடுத்த மனைவியாக வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தச் சகோதரிகளை விரோதிகளாக மாற்றிவிடும். உனது மனைவியின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

19 “ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள்.

20 “பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும்.

21 “நீ உனது குழந்தைகளை மோளேகு என்ற பொய்த் தெய்வத்திற்கு முன்பு நெருப்பில் நடக்கும்படி அனுமதியாதே. நீ இதனைச் செய்தால் உனது தேவனை மதிக்கவில்லை என்று பொருள். நானே கர்த்தர்.

22 “நீ பெண்ணோடு பாலின உறவு வைத்துக்கொள்வதைப் போல ஆணோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது பயங்கரமான பாவமாகும்.

23 “நீ எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை அருவருப்பு உள்ளவனாக்கும். இதுபோல் ஒரு பெண்ணும் எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது இயற்கைக்கு மாறானது.

24 “இது போன்ற தவறான செயல்களைச் செய்து உங்களைத் தீட்டுள்ளவர்களாக்கிக்கொள்ளாதீர்கள். இத்தேசத்தில் உள்ளவர்களை வெளியே துரத்திக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நிலத்தை உங்களுக்குத் தந்தேன், ஏனென்றால் அவர்கள் இத்தகைய பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். 25 அவர்கள் இந்த நாட்டையும் அருவருப்பாக்கிவிட்டார்கள். எனவே நான் இதன் பாவத்துக்காக இதனைத் தண்டிப்பேன். அந்நாடு அங்கு வாழ்பவர்களைக் கக்கிப்போடும்.

26 “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். நீங்கள் இது போன்ற பயங்கரமான பாவங்களைச் செய்யக் கூடாது. இந்த விதிகள் இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அவர்களிடையே வாழும் அயலாருக்கும் உரியது. 27 உங்களுக்கு முன்னால் இந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் அத்தகைய பாவங்களைச் செய்தார்கள். அதனால் நாடே அருவருப்பாயிற்று. 28 நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்களும் இந்த நாட்டை அருவருப்பாக்குவீர்கள். அவர்களை இந்நாடு கக்கிப்போட்டது போன்று உங்களைக் கக்கிப்போடும். 29 எவராவது இதுபோன்ற மோசமான பாவங்களைச் செய்தால் பிறகு அவர்கள் தங்கள் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள். 30 மற்ற ஜனங்கள் இத்தகைய மோசமான பாவங்களைச் செய்தார்கள், ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இது போன்ற மோசமான பாவங்களைச் செய்து உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாதீர்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.