Add parallel Print Page Options

கானாவூர் கல்யாணம்

கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.

“அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.

“இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.

அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.

இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.

பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.

வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.

11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.

Read full chapter