Add parallel Print Page Options

இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார்.

எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.

சீப்புருவில் பர்னபாவும் சவுலும்

பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).

அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, 10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! 11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான்.

அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். 12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.

தொடர் ஊழியம்

13 பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான். 14 அவர்கள் பயணத்தைத் தொடர்ந்து பெர்கேவிலிருந்து பிசிதியாவுக்கு அருகேயுள்ள நகராகிய அந்தியோகியாவுக்குப் போனார்கள். அந்தியோகியாவில் ஓய்வுநாளில் யூத ஜெப ஆலயத்திற்குள் போய் அமர்ந்தார்கள்.

Read full chapter