1 நாளாகமம் 18
Tamil Bible: Easy-to-Read Version
தாவீது பல நாடுகளை வெல்கிறான்
18 பிறகு தாவீது பெலிஸ்தரைத் தாக்கித் தோற்கடித்தான். காத் நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள சிறு நகரங்களையும் பெலிஸ்தரின் வசமிருந்து கைப்பற்றினான்.
2 பிறகு தாவீது மோவாப் நாட்டைத் தோற்கடித்தான். மோவாபியர்கள் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். அவர்கள் தாவீதிற்கு புகழுரைகளைச் செலுத்தினார்கள்.
3 தாவீது, ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகவும் சண்டையிட்டான். ஆதாரேசர் சோபா நாட்டின் ராஜா. தாவீது, அப்படைகளோடு ஆமாத் நகரத்தின்வரை போரிட்டான். தாவீது இவ்வாறு செய்வதற்குக் காரணம் என்னவென்றால் ஆதாரேசர் தனது அரசை ஐபிராத்து நதிவரை பரப்ப விரும்பினான். 4 தாவீது, ஆதாரேசரிடமிருந்து 1,000 இரதங்களையும் 7,000 இரதமோட்டிகளையும் 20,000 வீரர்களையும் கைப்பற்றினான். ஆதாரேசரின் பெரும்பாலான குதிரைகளைத் தாவீது முடமாக்கினான். அவை தேர் இழுக்கப் பயன்படுவன. ஆனால் தாவீது, அவற்றில் நூறு இரதக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டான்.
5 தமஸ்குஸ் நகரத்தில் இருந்து ஆர்மீனியர்கள் ஆதாரேசருக்கு உதவி செய்யவந்தனர். ஆனால் தாவீது, அவர்களையும் தோற்கடித்து 22,000 ஆர்மீனியர்களைக் கொன்றான். 6 பிறகு தாவீது, ஆராமில் உள்ள தமஸ்குஸ் நகரில் கோட்டை அமைத்தான். ஆர்மீனியர்கள் தாவீதின் வேலைக்காரர்களாகி அவனுக்குப் புகழுரைகளைக் கொண்டுவந்தனர். தாவீது எங்கெங்கு போனானோ அங்கெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றிகளைத் தந்தார்.
7 தாவீது ஆதாரேசரின் படைத்தளபதிகளிடமிருந்து தங்கள் கேடயங்களைப் பறித்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். 8 திப்காத்திலும் கூனிலுமுள்ள வெண்கலத்தையும் தாவீது எடுத்து வந்தான். இந்நகரங்கள் ஆதாரேசருக்கு உரியவை. பிறகு சாலொமோன் இந்த வெண்கலத்தை ஆலயத்திற்குரிய வெண்கலத்தொட்டி, தூண், தட்டுமுட்டு போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தினான்.
9 ஆமாத் நகரத்தின் ராஜா தோயூ. ஆதாரேசர் சோபா நாட்டின் ராஜா. தோயூ, தாவீது ஆதாரேசரின் படைகளை வென்றுவிட்டதை அறிந்தான். 10 எனவே, தோயூ அவனது குமாரனான ஆதோராமை ராஜா தாவீதினிடம் அனுப்பி சமாதானத்தைத் தெரிவித்து ஆசீர்வாதத்தை வேண்டினான். தாவீது ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்கடித்ததால் அவன் இவ்வாறு நடந்துக்கொண்டான். முன்பு போர்க்களத்தில் ஆதாரேசர் தோயூவோடு இருந்தான். ஆதோராம், தாவீதிற்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். 11 தாவீது ராஜா அவற்றைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தருக்கு கொடுத்துவிட்டான். ஏதோம், மோவாப், அம்மோனியர், பெலிஸ்தர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து பெற்ற பொன், வெள்ளி போன்றவற்றையும் தாவீது இவ்வாறே செய்து பரிசுத்தப்படுத்தினான்.
12 உப்பு பள்ளத்தாக்கிலே செருயாவின் குமாரனான அபிசாயி 18,000 ஏதோமியரைக் கொன்றான். 13 அபிசாயி ஏதோமில் அரண் அமைத்தான். அனைத்து ஏதோமியரும் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். தாவீது செல்லுமிடங்களில் எல்லாம் கர்த்தர் வெற்றியளித்தார்.
தாவீதின் முக்கிய அதிகாரிகள்
14 தாவீது, அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் ராஜா ஆனான். அவன் ஒவ்வொருவருக்கும் சரியானதையும், நியாயமானதையும் செய்தான். 15 செருயாவின் குமாரனான யோவாப் தாவீதின் படைத்தளபதியாக இருந்தான். ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் வரலாறு எழுதுபவனாக இருந்தான். 16 சாதோக்கும், அபிமெலேக்கும் ஆசாரியர்கள். சாதோக் அகிதூபின் குமாரன். அபிமெலேக் அபியதாரின் குமாரன். சவிஷா எழுத்துக்காரன். 17 பெனாயா, கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். பெனாயா யோய்தாவின் குமாரன். தாவீதின் குமாரர்களும் முக்கிய அதிகாரிகளாய் இருந்தனர். அவர்கள் தாவீதின் பக்கம் தொண்டு செய்தனர்.
2008 by Bible League International