மாற்கு 3:1-12
Tamil Bible: Easy-to-Read Version
சூம்பின கை குணமாக்கப்படுதல்
(மத்தேயு 12:9-14; லூக்கா 6:6-11)
3 மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். 2 இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். 3 இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார்.
4 பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை.
5 இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. 6 பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர்.
இயேசுவின் பின் திரளான கூட்டம்
7 தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர். 8 பிறகு யூதேயாவில் இருந்தும், எருசலேமிலிருந்தும், இதுமேயாவில் இருந்தும், யோர்தானுக்கு அக்கரையில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். அத்துடன் தீரு, சீதோன் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு செய்த அற்புதங்களை அறிந்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் வந்தார்கள்.
9 இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக்கொண்டார். 10 இயேசு ஏற்கெனவே பலரைக் குணமாக்கி இருந்தார். ஆகவே ஏராளமான நோயுற்ற மக்கள் நெருக்கிக்கொண்டு வந்து அவரைத் தொட முயன்றார்கள். 11 சிலர் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர். ஆவிகள் இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன் குனிந்து, “நீர் தான் தேவனுடைய குமாரன்” என்று உரக்கச் சத்தமிட்டன. 12 ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
Read full chapter2008 by Bible League International