Add parallel Print Page Options

மோசே, எலியாவுடன், இயேசு(A)

28 இச்செய்திகளை இயேசு கூறினதற்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்வதற்காக ஒரு மலையின்மீது ஏறினார். 29 இயேசு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது அவரது முகம் மாற்றமடைந்தது. அவரது ஆடைகள் ஒளி விடும் வெண்மையாக மாறின. 30 பின்னர் இரண்டு மனிதர்கள் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசேயும், எலியாவும் ஆவர். 31 மோசேயும் எலியாவும் கூட ஒளி பொருந்தியோராக காணப்பட்டனர். எருசலேமில் நிகழவிருக்கும் இயேசுவின் மரணத்தைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 32 பேதுருவும் மற்றவர்களும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் விழித்து இயேசுவின் மகிமையைக் கண்டனர். இயேசுவோடுகூட நின்றுகொண்டிருந்த அந்த இரண்டு மனிதர்களையும் அவர்கள் பார்த்தனர். 33 மோசேயும், எலியாவும் பிரிந்து செல்லும்போது பேதுரு, “குருவே, நாம் இங்கிருப்பது நல்லது. நாங்கள் இங்கு மூன்று கூடாரங்களை, ஒன்று உமக்காகவும் ஒன்று மோசேக்காகவும், ஒன்று எலியாவுக்காகவும், அமைப்போம்” என்று கூறினான். (பேதுரு தான் சொல்லிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கவில்லை)

34 இவ்வாறு பேதுரு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் அவர்களைச் சூழ்ந்தது. மேகம் சூழ்ந்ததும் பேதுரு, யாக்கோபு, யோவான், ஆகியோர் பயந்தனர். 35 மேகத்தினின்று ஒரு அசரீரி, “இவர் எனது மகன். நான் தேர்ந்துகொண்டவர் இவரே, இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றது.

36 அசரீரி முடிந்ததும் இயேசு மட்டுமே அங்கிருந்தார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்த்தவற்றைக் குறித்து ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.

Read full chapter