Add parallel Print Page Options

மனம் மாறுங்கள்

13 அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான். இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேரின் நிலை என்ன? எருசலேமில் வசிக்கின்ற எல்லாரைக் காட்டிலும் அவர்கள் மிகுந்த பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார்.

பயனற்ற மரம்

இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதனுக்கு ஓர் அத்தி மரம் இருந்தது. தனது தோட்டத்தில் அம்மரத்தை நட்டுவைத்திருந்தான். மரத்தில் சில பழங்கள் இருக்கிறதா என அம்மனிதன் பார்த்து வந்தான். அவன் கண்ணில் பழம் எதுவும் படவில்லை. தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.”

Read full chapter