Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

சாலொமோன் ஞானத்தை கேட்கிறான்

சாலொமோன் பலமுள்ள அரசனாக விளங்கினான். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனை மிகப் பெரியவனாக்கினார். இஸ்ரவேல் ஜனங்களோடு சாலொமோன் பேசினான். அத்துடன் எல்லா தலைவர்களோடும், பொது அதிகாரிகளோடும், நீதிபதிகளோடும், இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு வழிகாட்டிகளோடும், ஒவ்வொரு குடும்பத் தலைவர்களோடும் பேசினான். பிறகு சாலொமோனும் மற்றும் அனைவரும் கூடி கிபியோனில் இருக்கிற மேடைக்குப் போனார்கள். அங்கு தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. இதனைக் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசே வனாந்தரத்தில் இருக்கும்போது அமைத்தான். தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். அவன் எருசலேமில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கும்படி ஒரு கூடாரத்தை அமைத்திருந்தான். ஊரியின் மகனான பெசலெயேல் வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அது பரிசுத்தக் கூடாரத்தின் முன்பாக கிபியோனில் இருந்தது. எனவே சாலொமோனும் ஜனங்களும் கிபியோனுக்கு கர்த்தருடைய ஆலோசனை பெற சென்றனர். சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான்.

அன்று இரவு தேவன் சாலொமோனிடம், “நான் உனக்கு என்ன தரவேண்டும் என விரும்புகிறாய் என்பதை கேள்” என்றார்.

சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். இப்போது தேவனாகிய கர்த்தாவே! என் தந்தை தாவீதிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும். இப்பெரிய நாட்டிற்கு என்னை அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். பூமியில் உள்ள புழுதியைப் போன்று ஏராளமான அளவில் ஜனங்கள் வசிக்கின்றனர். 10 இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.

11 தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும். 12 ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த அரசனுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த அரசனும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.

13 எனவே, சாலொமோன் கிபியோனில் தொழுதுகொள்ளும் இடத்திற்குச் சென்றான். பிறகு சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு எருசலேமிற்கு இஸ்ரவேலின் அரசனாக அரசாளத் திரும்பிச் சென்றான்.

சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான்

14 சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான். 15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். அரசனின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர். 17 சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் அரசர்களுக்கும் ஆராம் அரசர்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.