Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

11 கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் யெப்தா, அவன் சிறந்த வீரன். ஆனால் யெப்தா ஒரு வேசியின் மகன். அவன் தந்தை கிலேயாத் என்பவன். கிலேயாத்தின் மனைவிக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்தபோது யெப்தாவை விரும்பவில்லை. அவனது சொந்த ஊரைவிட்டுச் செல்லுமாறு அம்மகன்கள் யெப்தாவைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் அவனை நோக்கி, “நீ நம் தந்தையின் சொத்தில் எதையும் பெறமாட்டாய். நீ வேறொரு பெண்ணின் மகன்” என்றனர். எனவே தன் சகோதரர்களினிமித்தமாக யெப்தா அங்கிருந்து போய் தோப் தேசத்தில் வாழ்ந்து வந்தான். தோப் தேசத்தில் சில முரட்டு மனிதர்கள் அவனைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.

கொஞ்சக் காலத்திற்குப் பின் அம்மோனிய ஜனங்கள் இஸ்ரவேலரோடு போர் செய்தனர். அம்மோனிய ஜனங்கள் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட்டதால் கீலேயாத்தின் தலைவர்கள் யெப்தாவிடம் சென்றனர். தோப் தேசத்தை விட்டுக் கீலேயாத்திற்கு யெப்தா திரும்பிவர வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.

தலைவர்கள் யெப்தாவை நோக்கி, “வா, வந்து எங்கள் சேனாதிபதியாக அம்மோனியர்களை எதிர்த்துப் போரிடு” என்றனர்.

ஆனால் யெப்தா கீலேயாத் தேசத்து மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “எனது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் என்னைப் பகைக்கிறீர்கள்! உங்களுக்குத் துன்பம் வந்தபோது என்னிடம் ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டான்.

கீலேயாத்தின் தலைவர்கள் யெப்தாவிடம், “அதனாலேயே நாங்கள் உன்னிடம் வந்துள்ளோம். எங்களோடு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போராடு. கீலேயாத்தில் வாழும் ஜனங்கள் எல்லோருக்கும் நீ அதிபதியாவாய்” என்றனர்.

அப்போது யெப்தா கீலேயாத்தின் தலைவர்களிடம், “நான் கீலேயாத்திற்கு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால் அவ்வாறே செய்வேன். ஆனால் கர்த்தர் எனக்கு வெற்றி பெற உதவினால், நான் உங்கள் புதியத் தலைவனாக இருப்பேன்” என்றான்.

10 கீலேயாத்தின் மூப்பர்கள் (தலைவர்கள்) யெப்தாவை நோக்கி, “நாம் கூறுகின்ற எல்லாவற்றையும் கர்த்தர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீ கூறுகின்றபடியே செய்வதாக நாங்கள் வாக்களிக்கிறோம்” என்றார்கள்.

11 எனவே யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு (தலைவர்களோடு) சென்றான். அவர்கள் யெப்தாவைத் தங்கள் தலைவனாகவும், அதிபதியாகவும் நியமித்தனர். மிஸ்பா நகரத்தில் கர்த்தருக்கு முன்பாக யெப்தா தனது வார்த்தைகளையெல்லாம் மீண்டும் கூறினான்.

அம்மோனிய ஜனங்களின் அரசனுக்கு யெப்தாவின் செய்தி

12 அம்மோனிய ஜனங்களின் அரசனிடம் யெப்தா செய்தியாளர்களை அனுப்பினான். “அம்மோனிய ஜனங்களுக்கும் இஸ்ரவேலருக்குமிடையே இருக்கும் பிரச்சினை என்ன? எங்கள் தேசத்தில் நீங்கள் போர் தொடுத்துவரக் காரணமென்ன?” என்பதே அவன் அனுப்பிய செய்தியாகும்.

13 அம்மோனிய ஜனங்களின் அரசன் யெப்தாவிடமிருந்து வந்தோருக்கு, “எகிப்திலிருந்து வந்தபோது இஸ்ரவேலர் எங்கள் தேசத்தை எடுத்துக்கொண்டதால் நாங்கள் இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்கிறோம். அர்னோன் நதியிலிருந்து யாபோக் நதி வரைக்கும் யோர்தான் நதிவரைக்கும் அவர்கள் எங்கள் தேசத்தை கைப்பற்றிக்கொண்டார்கள். இப்போது எங்கள் தேசத்தை அமைதியான முறையில் திரும்பக் கொடுத்துவிடுமாறு இஸ்ரவேலர்களிடம் கூறு” என்றான்.

14 எனவே யெப்தாவின் தூதுவர்கள் (செய்தி தெரிவிப்போர்) இச்செய்தியை யெப்தாவிற்குத் தெரிவித்தனர். யெப்தா மீண்டும் தூதுவர்களை அம்மோனிய அரசனிடம் அனுப்பினான்.

15 அவர்கள் இச்செய்தியை எடுத்துச் சென்றனர்:

“யெப்தா கூறுவது இதுவே: மோவாப் அல்லது அம்மோனிய ஜனங்களின் தேசத்தை இஸ்ரவேலர் எடுத்துக்கொள்ளவில்லை. 16 எகிப்திலிருந்து இஸ்ரவேலர் வெளியேறிய போது பாலைவன வழியாக செங்கடலுக்குச் சென்றனர். பின்பு காதேசுக்குப் போனார்கள். 17 இஸ்ரவேலர் ஏதோம் அரசனுக்கு தூதுவரை அனுப்பினார்கள். தூதுவர்கள் ஒரு தயவு கேட்டனர். அவர்கள், ‘இஸ்ரவேலர் உங்கள் தேசத்தினூடே கடந்து செல்லட்டும்’ என்று கேட்டனர். ஆனால் ஏதோமின் அரசன் தனது தேசத்தைக் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. மோவாப் அரசனுக்கும் இதே செய்தியை அனுப்பினோம். மோவாப் எங்களைத் தனது தேசத்தின் வழியாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இஸ்ரவேலர் காதேசில் தங்கினார்கள்.

18 “பின்பு இஸ்ரவேலர் பாலைவனத்தின் வழியாக ஏதோம், மோவாப் தேசங்களின் எல்லை ஓரமாகவே கடந்துச் சென்றனர். மோவாபின் கிழக்கே இஸ்ரவேலர் பயணம் செய்தனர். அர்னோன் நதியின் மறுபுறம் அவர்கள் முகாமிட்டுத் தங்கினார்கள். மோவாப் தேசத்தில் எல்லையையும் அவர்கள் தாண்டிச் செல்லவில்லை. (அர்னோன் நதியே மோவாபின் எல்லையாக இருந்தது.)

19 “எமோரிய அரசனாகிய சீகோனிடம் இஸ்ரவேலர் தூதுவரை அனுப்பினார்கள். சீகோன் எஸ்போன் நகரத்து மன்னன். தூதுவர் சீகோனிடம், ‘இஸ்ரவேலர் உங்கள் தேசத்தின் வழியே கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும். எங்கள் தேசத்துக்குப் போக நாங்கள் விரும்புகிறோம்’ என்றனர். 20 ஆனால், எமோரிய அரசனாகிய சீகோன் தன் எல்லைகளைக் கடந்து செல்ல இஸ்ரவேலரை அனுமதிக்கவில்லை. சீகோன் தம் ஆட்களை ஒருங்கே அழைத்து யாகாசில் முகாமிட்டான். பின் எமோரியர் இஸ்ரவேலரோடு போர் செய்தனர். 21 ஆனால் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், சீகோனையும் அவனது சேனையையும் வெல்வதற்கு இஸ்ரவேலருக்கு உதவினார். எனவே எமோரியரின் தேசம் இஸ்ரவேலருக்குச் சொந்தமாயிற்று. 22 அவ்வாறு இஸ்ரவேலர் எமோரியரின் தேசத்தையே தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முடிந்தது. அத்தேசம் அர்னோன் நதியிலிருந்து யாபோக் நதிவரைக்கும் இருந்தது. அத்தேசம் பாலைவனத்திலிருந்து யோர்தான் நதிவரைக்கும் பரவியிருந்தது.

23 “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரே எமோரியரை அவர்கள் தேசத்திலிருந்து வெளியேறும்படிச் செய்தார். கர்த்தர் இஸ்ரவேலருக்கு அத்தேசத்தைக் கொடுத்தார். இஸ்ரவேலரை இத்தேசத்தைவிட்டுப் போகச்செய்ய முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா? 24 காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும். எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நாங்கள் வாழ்வோம்! 25 நீங்கள் சிப்போரின் மகனாகிய பாலாக்கைக் காட்டிலும் சிறத்வர்களா? அவன் மோவாப் தேசத்தின் அரசனாக இருந்தான். அவன் இஸ்ரவேலரோடு வாக்குவாதம் செய்தானா? அவன் இஸ்ரவேலரோடு நேரில் போரிட்டானா? 26 இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதைச் சுற்றிலுமுள்ள ஊர்களிலும் 300 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். இஸ்ரவேலர் ஆரோவேரிலும் அதைச் சுற்றிலுமுள்ள நகரங்களிலும் 300 ஆண்டுகள் வசித்து உள்ளனர். இஸ்ரவேலர் அர்னோன் நதியருகேயுள்ள எல்லா நகரங்களிலும் 300 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். இவ்வளவு காலமும் அந்நகரங்களைக் கைப்பற்றிக்கொள்ள நீங்கள் முயலாததேன்? 27 இஸ்ரவேலர் உங்களுக்கெதிராகப் பாவம் செய்யவில்லை. ஆனால் இஸ்ரவேலருக்கெதிராக நீங்கள் தீமை செய்கிறீர்கள். உண்மையான நீதிபதியாகிய கர்த்தரே இஸ்ரவேலர்கள், அம்மோனியர்கள் ஆகிய இருவரிடையே சரியானவர் யார் என்பதைத் தீர்மானிக்கட்டும்!” என்றனர்.

28 அம்மோனிய ஜனங்களின் அரசன் யெப்தாவிடமிருந்து வந்த இச்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.

யெப்தாவின் வாக்குறுதி

29 அப்போது தேவஆவியானவர் யெப்தாவின் மேல் வந்தார். யெப்தா கீலேயாத், மனாசே பகுதிகளைக் கடந்து கீலேயாத்திலுள்ள மிஸ்பாவுக்குப் போனான். கீலேயாத்திலுள்ள மிஸ்பாவிலிருந்து அம்மோனிய ஜனங்களின் தேசத்தை யெப்தா தாண்டிச் சென்றான்.

30 யெப்தா கர்த்தரிடம், “நீர் அம்மோனிய ஜனங்களை வெல்ல என்னை அனுமதித்தால் 31 வெற்றிபெற்று நான் திரும்பும்போது, எனது வீட்டிலிருந்து முதலில் வெளிவருகிறது எதுவோ அதை உமக்குத் தகன பலியாகக் கொடுப்பேன்” என்று வாக்குறுதி செய்தான்.

32 பின்பு யெப்தா அம்மோனிய ஜனங்களின் தேசத்திற்குச் சென்று, அம்மோனிய ஜனங்களோடுப் போரிட்டான். அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவனுக்கு உதவினார். 33 ஆரோவேர் நகரத்திலிருந்து மின்னித் நகரம் வரைக்கும் அவர்களைத் தோற்கடித்தான். யெப்தா 20 நகரங்களைக் கைப்பற்றினான். பின் அவன் அம்மோனிய ஜனங்களோடு ஆபேல்கேராமிம் வரைக்கும் போரிட்டான். இஸ்ரவேலர் அம்மோனிய ஜனங்களைத் தோற்கடித்தனர். இது அம்மோனியருக்கு மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

34 பின்பு யெப்தா தனது வீட்டிற்குப் போனான். அவனைச் சந்திப்பதற்கு அவனது மகள் எதிரே வந்தாள். அவள் தம்புரு வாசித்து நடனமாடிக்கெண்டிருந்தாள். அவள் அவனது ஒரே மகள். யெப்தா அவளை மிகவும் நேசித்தான். யெப்தாவிற்கு வேறு மகனோ, மகளோ இல்லை. 35 தனது வீட்டிலிருந்து முதலில் வெளிவந்தவள் தன் மகளே என்று யெப்தா அறிந்தபோது தனது ஆடையைக் கிழிந்து தனது துக்கத்தைக் காட்டினான். பின் அவன், “என் மகளே! நீ என்னை அழித்தாய். நீ என்னை மிகுந்த துக்கத்திற்குள்ளாக்கினாய். நான் கர்த்தருக்குக் கொடுத்த வாக்குறுதியை மாற்ற இயலாது” என்றான்.

36 அப்போது அவனது மகள் யெப்தாவை நோக்கி, “தந்தையே! நீங்கள் கர்த்தருக்கு கொடுத்த உங்கள் வாக்கைக் காப்பாற்றுங்கள். நீங்கள் செய்வதாகக் கூறியதைச் செய்யுங்கள். உங்கள் பகைவராகிய அம்மோனிய ஜனங்களை நீங்கள் வெல்வதற்கு கர்த்தர் உதவியுள்ளார்” என்றாள்.

37 பின்பு யெப்தாவின் மகள் தன் தந்தையிடம், “எனக்காக முதலில் ஒரு காரியம் செய்யுங்கள். நான் இரண்டு மாதங்கள் தனித்திருக்க வேண்டும், நான் மலைகளுக்குப் போவேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். குழந்தை பெறவும் மாட்டேன். எனவே, நானும் எனது தோழியரும் போய் சேர்ந்து அழ அனுமதி கொடுங்கள்” என்றாள்.

38 யெப்தா, “போய், அவ்வாறே செய்” என்றான். யெப்தா அவளை இரண்டு மாதத்திற்கு அங்கிருந்து அனுப்பி வைத்தான். யெப்தாவின் மகளும் அவளது தோழியரும் மலைகளில் தங்கினார்கள். அவர்கள் அவளுக்காக அழுதனர். ஏனென்றால் அவள் திருமணம் செய்து குழந்தை பெறுவதாக இல்லை.

39 இரண்டு மாதங்கள் முடிந்த பின்னர், யெப்தாவின் மகள் தந்தையிடம் திரும்பினாள். கர்த்தருக்கு வாக்குறுதி அளித்தபடியே யெப்தா அவளுக்குச் செய்தான். யெப்தாவின் மகள் யாரோடும் பாலின உறவு கொண்டு வாழ்ந்திருக்கவில்லை. 40 ஒவ்வொரு ஆண்டும் கீலேயாத்திலுள்ள பெய்தாவின் மகளை இஸ்ரவேலின் பெண்கள் நினைவுகூர்ந்தனர். அப்பெண்கள் ஒவ்வொரு வருடமும் நான்கு நாட்கள் யெப்தாவின் மகளுக்காக அழுதனர். இது இஸ்ரவேலில் ஒரு பழக்கமாயிற்று.