ஆதியாகமம் 16
Tamil Bible: Easy-to-Read Version
ஆகார் எனும் வேலைக்காரப்பெண்
16 சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார். 2 சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்” என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான்.
3 இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்) 4 ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள். 5 ஆனால் சாராய் ஆபிராமிடம், “இப்பொழுது என் வேலைக்காரப் பெண் என்னை வெறுக்கிறாள். இதற்காக நான் உம்மையே குற்றம்சாட்டுவேன். நான் அவளை உமக்குக் கொடுத்தேன். அவள் கர்ப்பமுற்றாள். பிறகு என்னைவிடச் சிறந்தவளாகத் தன்னை நினைத்துக்கொள்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில் கர்த்தரே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள்.
6 ஆனால் ஆபிராமோ சாராயிடம், “நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்” என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள்.
இஸ்மவேல் – ஆகாரின் குமாரன்
7 பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரை கர்த்தருடைய தூதன் கண்டான். 8 தூதன் அவளிடம், “சாராயின் பணிப்பெண்ணாகிய ஆகாரே. ஏன் இங்கே இருக்கிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.
அவளோ, “நான் சாராயிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.
9 அதற்கு கர்த்தருடைய தூதன், “சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு. 10 உன்னிடமிருந்து ஏராளமான ஜனங்கள் தோன்றுவர், அவர்கள் எண்ண முடியாத அளவிற்கு இருப்பார்கள்” என்றான்.
11 மேலும் கர்த்தருடைய தூதன்,
“ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய்.
உனக்கு ஒரு குமாரன் பிறப்பான்.
அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு.
ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் குமாரன் உனக்கு உதவுவான்.
12 இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும்,
சுதந்திரமானவனாகவும் இருப்பான்.
அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான்.
ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள்.
அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான்.
அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான்.
13 கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள். 14 எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது.
15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான். 16 ஆபிராம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெறும்போது அவனுக்கு 86 வயது.
ஆதியாகமம் 17
Tamil Bible: Easy-to-Read Version
உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம்
17 ஆபிராமுக்கு 99 வயதானபோது கர்த்தர் அவனுக்கு காட்சி தந்தார். அவர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட. 2 நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார்.
3 தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான். 4 தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன். 5 நான் உனது பெயரை மாற்றுவேன். இப்போது உனது பெயர் ஆபிராம், இனி உன் பெயர் ஆபிரகாம். நான் உன்னைப் பல நாடுகளுக்குத் தந்தையாக்கப் போவதால் இந்தப் பெயரை உனக்கு சூட்டுகிறேன். 6 நான் உனக்கு அநேக சந்ததிகளை கொடுப்பேன். உன்னிடமிருந்து புதிய நாடுகள் உருவாகும். பல ராஜாக்கள் உன்னிடமிருந்து எழும்புவார்கள். 7 நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன். 8 நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.
9 மேலும் தேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்க வேண்டும். 10 இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். 12 ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 13 எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 14 இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார்.
ஈசாக்கு சத்தியத்திற்குரிய குமாரன்
15 தேவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். 16 அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு குமாரனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல ராஜாக்கள் வருவார்கள்” என்றார்.
17 ஆபிரகாம் தன் முகம் தரையில்படும்படி விழுந்து வணங்கி தேவனுக்கு மரியாதை செலுத்தினான். எனினும் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டே, “எனக்கு 100 வயது ஆகிறது. என்னால் ஒரு குமாரன் பிறப்பது கூடியகாரியமா? சாராளுக்கோ 90 வயது. அவள் ஒரு குமாரனைப் பெறுவது எப்படி?” என்றான்.
18 ஆபிரகாம் தேவனிடம், “இஸ்மவேல் வாழ்ந்து உமக்குச் சேவை செய்வான் என நம்புகிறேன்” என்றான்.
19 தேவன், “இல்லை. உன் மனைவி சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்று சொன்னேன். நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாய். நான் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வேன். அந்த உடன்படிக்கையே என்றென்றைக்கும் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் தொடரும்.
20 “நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும். 21 ஆனால் நான் என் உடன்படிக்கையை ஈசாக்கிடம் ஏற்படுத்துவேன். ஈசாக்கு சாராளின் குமாரனாயிருப்பான். அவன் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பிறந்திருப்பான்” என்றார்.
22 ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார். 23 தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது குமாரன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.
24 ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. 25 அப்போது ஆபிரகாமின் குமாரன் இஸ்மவேலுக்கு 13 வயது. 26 ஆபிரகாமும் அவனது குமாரனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 27 அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர்.
ஆதியாகமம் 21
Tamil Bible: Easy-to-Read Version
இறுதியாக, சாராளுக்கு ஒரு குழந்தை
21 கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். 2 சாராள் கர்ப்பமுற்றாள். ஆபிரகாமின் வயோதிப காலத்தில் அவனுக்கு ஓர் ஆண் குமாரனைப் பெற்றுக் கொடுத்தாள். இவையெல்லாம் தேவன் வாக்களித்தபடியே நடந்தது. 3 சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். 4 ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது.
5 ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது. 6 சாராள், “தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்தார். இதைக் கேள்விப்படும் எவரும் என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். 7 ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்” என்றாள்.
வீட்டில் பிரச்சனை
8 ஈசாக்கு பால்குடிக்க மறக்கும் நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து கொடுத்தான். 9 ஆகார் என்னும் எகிப்திய அடிமைப்பெண் ஆபிரகாமின் முதல் குமாரனைப் பெற்றிருந்தாள். சாராள் அவனைப் பார்த்தாள். அவன் கேலிச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது. 10 சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் குமாரனையும் வெளியே தள்ளும். நாம் சாகும்போது நமக்குரிய அனைத்தையும் ஈசாக்கே பெற வேண்டும். அந்த அடிமைப் பெண்ணின் குமாரன் அதில் பங்கு போடுவதை நான் விரும்பவில்லை” என்றாள்.
11 இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் குமாரன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான். 12 ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “அடிமைப் பெண்ணையும், அவள் குமாரனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு. 13 ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் குமாரனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் குமாரன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்” என்றார்.
14 மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்து அவற்றை ஆகாரிடம் கொடுத்தான். அவள் அவற்றை எடுத்துக்கொண்டு தன் மகனோடு வெளியேறி, பெயெர்செபா பாலைவனத்தில் அலைந்து திரிந்தாள்.
15 கொஞ்ச நேரம் கழிந்ததும் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிப்பதற்கு எதுவும் இல்லாமல் போயிற்று. எனவே ஆகார் தன் குமாரனை ஒரு புதரின் அடியில் விட்டாள். 16 ஆகார் கொஞ்ச தூரம் போய் உட்கார்ந்தாள். அவள் தன் குமாரன் தண்ணீர் இல்லாமலேயே மரித்துப்போவான் என்று எண்ணினாள். அவன் மரிப்பதை அவள் பார்க்க விரும்பவில்லை. எனவே அவள் அங்கே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
17 சிறுவனின் அழுகையை தேவன் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே! உனக்கு என்ன நடந்தது? அஞ்ச வேண்டாம், கர்த்தர் சிறுவனின் அழுகையைக் கேட்டார். 18 போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்” என்றார்.
19 பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் குமாரனுக்கும் குடிக்கக் கொடுத்தாள். 20 அவன் வளர்ந்து ஆளாகும்வரை தேவன் அவனோடு இருந்தார். இஸ்மவேல் பாலைவனத்தில் வாழ்ந்து பெரிய வேட்டைக்காரன் ஆனான். வில்லைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டான். 21 அவனது தாய் அவனுக்கொரு மனைவியை எகிப்தில் கண்டுபிடித்தாள். அவர்கள் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தனர்.
அபிமெலேக்கோடு ஆபிரகாமின் உடன்படிக்கை
22 இவைகளுக்குப் பின்னர் அபிமெலேக்கும் பிகோலும் ஆபிரகாமோடு பேசினர். பிகோல் அபிமெலேக்கின் படைத் தளபதி. அவர்கள் ஆபிரகாமிடம், “நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவன் உன்னோடு இருக்கிறார். 23 எனவே இப்போது எனக்கு தேவனுக்கு முன்பு ஒரு வாக்குறுதி கொடு. நீ என்னோடும், என் பிள்ளைகளோடும் நியாயமாக நடந்துகொள்வேன் என்றும், நீ என்னோடும், நீ வாழ்கிற இந்தத் தேசத்தோடும் கருணையாய் இருப்பேன் என்றும் வாக்குறுதிகொடு. நான் உன்னோடு கருணையாய் இருப்பதுபோன்று நீ என்னோடு கருணையாய் இருப்பதாக உறுதியளி” என்று கேட்டனர்.
24 ஆபிரகாமோ, “நீங்கள் என்னை நடத்துவது போன்று நானும் உங்களை நடத்துவேன்” என்று சொன்னான். 25 பிறகு ஆபிரகாம் அபிமெலேக்கிடம் ராஜாவின் ஆட்கள் அவனது கிணற்றை அபகரித்துக்கொண்டதாய் முறையிட்டான்.
26 ஆனால் அபிமெலேக்கோ, “யார் இதைச் செய்தது என்று எனக்குத் தெரியாது, இதற்கு முன் நீ எனக்கு இதைப்பற்றி சொல்லவில்லை” என்று கூறினான்.
27 ஆகவே, அபிமெலேக்கும் ஆபிரகாமும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி ஆபிரகாம் ராஜாவுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் ஒப்பந்தத்தின் அத்தாட்சியாகக் கொடுத்தான். 28 ஆபிரகாம் ஏழு பெண் ஆட்டுக்குட்டிகளையும் தனியாக அபிமெலேக்கு முன்பு நிறுத்தினான்.
29 அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “ஏன் இவற்றைத் தனியாக இதுபோல் நிறுத்தியிருக்கிறாய்” என்று கேட்டான்.
30 அதற்கு ஆபிரகாம், “என்னிடத்திலிருந்து நீ இவற்றை ஏற்றுக்கொண்டால், அது நான் இந்தக் கிணற்றைத் தோண்டியதற்கு அடையாளமாகும்” என்றான்.
31 அதற்குப் பிறகு அந்தக் கிணறு பெயெர்செபா என்று அழைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்ட இடம் என்று இதற்குப் பொருள்.
32 இவ்வாறு அபிமெலேக்கும் ஆபிரகாமும் அந்த இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் அபிமெலேக்கும் அவனது படையும் அந்த இடத்தை விட்டு பெலிஸ்தருடைய நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.
33 ஆபிரகாம் பெயெர்செபாவில் ஒரு புதிய மரத்தை நட்டு என்றென்றும் ஜீவிக்கும் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். 34 ஆபிரகாம் பெலிஸ்தருடைய நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தான்.
ஆதியாகமம் 25
Tamil Bible: Easy-to-Read Version
ஆபிரகாமின் குடும்பம்
25 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். 2 கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள். 3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான். தேதானுடைய சந்ததி அசூரீம், லெத்தூசீம், லெயூமீம், என்பவர்கள். 4 மீதியானுக்கு ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்ற குமாரர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் பிள்ளைகள். 5-6 ஆபிரகாம் மரிப்பதற்குமுன், அவன் தன் வேலைக்காரப் பெண்களின் பிள்ளைகளுக்குப் பரிசுகளைக் கொடுத்து கிழக்கு நாடுகளுக்கு ஈசாக்கை விட்டு அப்பால் அவர்களை அனுப்பி வைத்தான். பின் ஆபிரகாம் தனக்குரிய எல்லாவற்றையும் ஈசாக்குக்கு உரிமையாக்கினான்.
7 ஆபிரகாமுக்கு 175 வயது ஆனது. 8 அதனால் அவன் மெலிந்து பலவீனமாகி மரணமடைந்தான். அவன் ஒரு நீண்ட திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தான். அவன் தனது பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 9 அவனது குமாரர்களான ஈசாக்கும் இஸ்மவேலும் அவனை மக்பேலா குகையிலே அடக்கம் செய்தனர். அந்தக் குகை எப்பெரோனின் வயலில் இருந்தது. எப்பெரோன் சோகாரின் குமாரன். அந்த இடம் மம்ரேக்குக் கிழக்கே இருந்தது. 10 இந்தக் குகையைத்தான் ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான். சாராளோடு சேர்த்து ஆபிரகாமை அடக்கம் செய்துவிட்டனர். 11 ஆபிரகாம் மரித்துப் போனபின் தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஈசாக்கு தொடர்ந்து பெயர்லகாய்ரோயியில் வாழ்ந்து வந்தான்.
12 பின்வருவது இஸ்மவேலின் குடும்பப் பட்டியல்: இஸ்மவேல் ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவன். (ஆகார் சாராளின் எகிப்தியப் பணிப்பெண்.) 13 இஸ்மவேலின் பிள்ளைகளது பெயராவன: மூத்தகுமாரன் பெயர் நெபாயோத், பின் கேதார், தொடர்ந்து அத்பியேல், மிப்சாம். 14 மிஷ்மா, தூமா, மாசா, 15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள் பிறந்தார்கள். இவை அனைத்தும் இஸ்மவேலின் ஜனங்களின் பெயர்கள் ஆகும். 16 ஒவ்வொரு குமாரனும் தங்கள் குடியிருப்புகளை நகரங்களாக்கிக்கொண்டனர். பன்னிரண்டு பிள்ளைகளும் தம் ஜனங்களுடன் பன்னிரண்டு ராஜகுமாரர்களைப்போல வாழ்ந்தனர். 17 இஸ்மவேல் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். பின் அவன் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். 18 இஸ்மவேலின் சந்ததிகள் பாலைவனப் பகுதி முழுவதும் பரவி குடியேறினார்கள். அப்பகுதி ஆவிலா முதல் சூர் வரை இருந்தது. சூர் எகிப்துக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து அசிரியா வரை பரவிற்று. இஸ்மவேலின் சந்ததிகள் அவ்வப்போது அவனுடைய சகோதரர்களின் ஜனங்களைத் தாக்கினார்கள்.
ஈசாக்கின் குடும்பம்
19 இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன். 20 ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்துகொண்டான். ரெபெக்காள் பதான் அராம் என்னும் ஊரைச் சேர்ந்த பெத்துவேலின் குமாரத்தி. லாபானுக்குச் சகோதரி. 21 ஈசாக்கின் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே, அவன் தன் மனைவிக்காக கர்த்தரிடம் ஜெபித்தான். ஈசாக்கின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் ரெபெக்காள் கர்ப்பமடையச் செய்தார்.
22 அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, “ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?” என்று கேட்டாள். 23 அதற்கு கர்த்தர்,
“உனது கர்ப்பத்தில் இரண்டு நாடுகள் உள்ளன.
இரண்டு குடும்பங்களின் ராஜாக்கள் உனக்குப் பிறப்பார்கள்.
அவர்கள் பிரிக்கப்பட்டு ஒருவனைவிட இன்னொருவன் பலவானாக இருப்பான்.
மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்” என்றார்.
24 சரியான நேரம் வந்தபோது ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 25 முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான். 26 இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது.
27 பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா திறமை மிக்க வேட்டைக்காரன் ஆனான். அவன் எப்போதும் வெளியே அலைவதிலேயே விருப்பப்பட்டான். ஆனால் யாக்கோபு அமைதியானவன், தன் கூடாரத்திலேயே தங்கியிருந்தான். 28 ஈசாக்கு ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடிய மிருகங்களை உண்ண ஈசாக்கு விரும்பினான். ஆனால் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள்.
29 ஒருமுறை ஏசா வேட்டை முடித்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். யாக்கோபு ஒரு பாத்திரத்தில் கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30 எனவே ஏசா யாக்கோபிடம், “நான் பலவீனமாகவும் பசியாகவும் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் கூழ் கொடு” என்று கேட்டான் (இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பெயராயிற்று.)
31 ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: “முதல் குமாரன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்” என்று கேட்டான்.
32 ஏசாவோ, “நான் பசியால் மரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மரித்துப் போனால் என் தந்தையின் சொத்துக்கள் எல்லாம் எனக்கு உதவுவதில்லை. எனவே நான் எனது பங்கை உனக்குத் தருகிறேன்” என்றான்.
33 ஆனால் யாக்கோபு, “முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். 34 பிறகு யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான். இவ்வாறு ஏசா தனது பிறப்புரிமையைப்பற்றி கவலைப்படாமல் இருந்தான்.
2008 by Bible League International