Add parallel Print Page Options

கர்த்தரிடம் திரும்பு

14 இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா. நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம்,

“எங்கள் பாவங்களை எடுத்துவிடும்.
    நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும்.
    நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம்.
அசீரியா எங்களைக் காப்பாற்றாது.
    நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம்.
நாங்கள் மீண்டும் ஒருபோதும்
    ‘எங்கள் தேவன்’
என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம்.
    ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்.”

கர்த்தர் இஸ்ரவேலை மன்னிப்பார்

கர்த்தர் கூறுகிறார்:
“என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன்.
நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன்.
    ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன்.
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்.
    இஸ்ரவேல் லீலிப் புஷ்பத்தைப் போன்று மலருவான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களைப்போன்று வளருவான்.
அவனது கிளைகள் வளரும்.
    அவன் அழகான ஒலிவ மரத்தைப் போன்றிருப்பான்.
அவன் லீபனோனின் கேதுரு மரங்களிலிருந்து வரும்
    இனிய மணத்தைப் போன்று இருப்பான்.
இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் எனது பாதுகாப்பின் கீழ் வாழ்வார்கள்.
    அவர்கள் தானியத்தைப் போன்று வளருவார்கள்.
    அவர்கள் திராட்சைக் கொடியைப் போன்று மலருவார்கள்.
    அவர்கள் லீபனோனின் திராட்சைரசம் போல் இருப்பார்கள்.”

கர்த்தர் விக்கிரகங்களைப் பற்றி இஸ்ரவேலை எச்சரிக்கிறார்

“எப்பிராயீமே, நான் (கர்த்தர்) இனி விக்கிரகங்களோடு எந்தத் தொடர்பும் கொள்ளமாட்டேன்.
    நான் ஒருவனே உங்களது ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர்.
நான் ஒருவனே உன்னைக் கவனித்து வருபவர். நான் எப்பொழுதும் பசுமையாக இருக்கும் தேவதாரு மரத்தைப் போன்றவர்.
    உன் கனி என்னிடமிருந்து வருகிறது.”

இறுதி அறிவுரை

அறிவுள்ள ஒருவன் இவற்றைப் புரிந்துக்கொள்கிறான்.
    விழிப்புள்ள ஒருவன் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய வழிகள் சரியாக இருக்கின்றன.
    அவற்றில் நல்லவர்கள் நடப்பார்கள். பாவிகளோ அவற்றில் இடறிவிழுந்து மரிப்பார்கள்.