Revised Common Lectionary (Complementary)
புத்தகம் 4
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.
90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
2 தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!
3 நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
4 ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
5 நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
6 காலையில் புல் வளரும்,
மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
7 தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
8 எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
9 உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
10 “ஒரு செடி துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பதுபோல், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. தேவன் அடையாளம் கொடுத்துவிட்டார். பகைவன் தயாராகிவிட்டான். பெருமைகொண்ட ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஏற்கெனவே வல்லமை வாய்ந்தவனாகிக்கொண்டிருக்கிறான். 11 மூர்க்கத்தனமான மனிதன் கெட்ட ஜனங்களைத் தண்டிக்கத் தயாராகி இருக்கிறான். இஸ்ரவேலில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவர்களில் ஒருவன் அல்ல. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அவன் இல்லை. அவன் அந்த ஜனங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவன் அல்ல.
12 “அந்தத் தண்டனைக் காலம் வந்திருக்கிறது, அந்த நாள் இதோ இருக்கிறது. பொருட்களை வாங்குகிறவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். பொருட்களை விற்பவனும் விற்பதைப்பற்றி துக்கப்படமாட்டான். ஏனென்றால், அப்பயங்கரமான தண்டனை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். 13 தம் சொத்தை விற்கிற ஜனங்கள் திரும்பவும் அங்கே வருவதில்லை. ஒருவன் உயிர் தப்பிப் பிழைத்தாலும் அவன் தன் சொத்தைப் பெற திரும்பப் போகமாட்டான். ஏனென்றால், இந்த தரிசனம் ஜனங்கள் கூட்டம் முழுவதற்குரியதாகும். எனவே, ஒருவன் தப்பி உயிர் பிழைத்தாலும் ஜனங்கள் பலமிருப்பதாக உணரமாட்டார்கள்.
14 “அவர்கள் ஜனங்களை எச்சரிக்க எக்காளத்தை ஊதுவார்கள். ஜனங்கள் போருக்குத் தயாராவார்கள். ஆனால் அவர்கள் போர் செய்யமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கூட்டத்தின் மேல் நான் எவ்வளவு கோபங்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுவேன். 15 பகைவன் தனது வாளோடு நகரத்திற்கு வெளியே இருக்கிறான். நோயும் பசியும் நகரத்திற்குள்ளே இருக்கின்றன. ஒருவன் நகரத்திற்கு வெளியே போனால் பகைவரின் போர்வீரன் கொல்வான். அவன் நகரில் தங்கினால் பசியும் நோயும் அவனை அழிக்கும்.
16 “ஆனால் சில ஜனங்கள் தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் மலைகளுக்கு ஓடுவார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் தமது அனைத்து பாவங்களுக்காகவும் வருந்துவார்கள். அவர்கள் அழுவார்கள். புறாக்களைப் போன்ற துயர ஒலிகளை எழுப்புவார்கள். 17 ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும். 18 அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள். 19 அவர்கள் தமது தங்கத்தாலும் வெள்ளியாலுமான சிலைகளை வீதிகளில் எறிவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்கள் மீது தன் கோபத்தைக் காட்டும்போது அச்சிலைகளால் அவர்களுக்கு உதவமுடியாமல் இருக்கும். அச்சிலைகள் அவர்களைப் பாவத்தில் விழச்செய்கிற வலையல்லாமல் வேறு எதுவுமில்லை. அச்சிலைகள் ஜனங்களுக்கு உணவைக் கொடுப்பது இல்லை. அச்சிலைகள் அவர்கள் வயிற்றில் உணவை வைப்பதுமில்லை.
20 “அந்த ஜனங்கள் தம் அழகான நகைகளைப் பயன்படுத்தி ஒரு சிலையைச் செய்தனர். அவர்கள் அச்சிலைக்காகப் பெருமைப்பட்டனர். அவர்கள் தமது வெறுக்கத் தக்க சிலைகளைச் செய்தனர்! அவர்கள் நரகலான அவற்றைச் செய்தனர். எனவே நான் (தேவன்) அவர்களை அழுக்கு நிறைந்த கந்தையைப்போல் வெளியே எறிவேன். 21 அவர்களை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்படி அனுமதிப்பேன். அந்நியர்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். அந்த அந்நியர்கள் சில ஜனங்களைக் கொன்று மற்றவர்களைக் கைதிகளாகச் சிறைபிடிப்பார்கள். 22 அவர்களிடமிருந்து நான் என் தலையைத் திருப்புவேன். நான் அவர்களைப் பார்க்கமாட்டேன். அந்த அந்நியர்கள் என் ஆலயத்தை அழிப்பார்கள். அவர்கள் அப்பரிசுத்தமான கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்வார்கள்.
23 “சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும். 24 நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்.
25 “ஜனங்களாகிய நீங்கள் அச்சத்தால் நடுங்குவீர்கள். நீங்கள் சமாதானத்தைத் தேடுவீர்கள், ஆனாலும் அது இருக்காது. 26 நீங்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் துன்பக் கதைகளைக் கேட்பீர்கள். நீங்கள் கெட்ட செய்திகளைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் தீர்க்கதரிசியைத் தேடி அவனிடம் தரிசனம் பற்றி கேட்பீர்கள், ஆனால் அது கிடைக்காது. ஆசாரியர்களிடம் உங்களுக்குக் கற்றுத்தர எதுவும் இருக்காது. மூப்பர்களிடம் உங்களுக்கு ஆலோசனை சொல்ல எதுவும் இருக்காது. 27 உங்கள் ராஜா மரித்துப்போன ஜனங்களுக்காக அழுதுகொண்டிருப்பான். தலைவர் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருப்பார்கள். பொது ஜனங்கள் மிகவும் பயந்து போயிருப்பார்கள். ஏனென்றால், நான் அவர்களுடைய தீயசெயல்களுக்கு ஏற்றவண்ணம் திருப்பிக்கொடுப்பேன். அவர்களுக்குரிய தண்டனையை நான் தீர்மானிப்பேன். நான் அவர்களைத் தண்டிப்பேன். பிறகு அந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.”
திரும்பி வரும் தீய ஆவி
(லூக்கா 11:24-26)
43 “பிசாசின் பொல்லாத ஆவி ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியில் வரும்பொழுது, வறண்ட நிலப்பகுதியில் ஓய்விடம் தேடி அலைகிறது. ஆனால், அதற்கு ஓய்விடம் கிடைப்பதில்லை. 44 எனவே, அந்த ஆவி, ‘நான் புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்வேன்’ என்று சொல்லி அந்த ஆவி திரும்பி அதே மனிதனிடம் வரும்பொழுது, அது இருந்த இடம் வெறுமையாயும் சுத்தமாயும் ஒழுங்குடனும் இருப்பதை அறிகிறது. 45 பின்னர், வெளியேறித் தன்னிலும் பொல்லாத மேலும் ஏழு பொல்லாத ஆவிகளை அழைத்து வருகிறது. எல்லா ஆவிகளும் அவனுக்குள் புகுந்து வசிக்கின்றன. முன்பைவிட அவனுக்கு ஆழ்ந்த தொல்லை ஏற்படுகிறது. இன்று வாழ்கின்ற பொல்லாதவர்களுக்கும் அப்படியே நேரும்” என்று பதிலளித்தார்.
2008 by World Bible Translation Center