Add parallel Print Page Options

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.

57 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
    என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
    பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
    தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
    எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
    தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
    என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
    அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்,
    அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
    அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.

தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
    உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
    நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
    ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.

ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
    அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
    நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
என் ஆத்துமாவே, எழுந்திரு.
    வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
    ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
10 உமது உண்மையான அன்பு
    வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
    அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.