Add parallel Print Page Options

தரியுவின் கட்டளை

எனவே, தனக்கு முன் அரசாண்ட அரசர்களின் ஆவணங்களைத் தேடும்படி அரசன் தரியு கட்டளையிட்டான். பணம் சேமித்து வைக்கபட்டிருந்த இடத்திலேயே அதிகாரப்பூர்வமான பத்திரங்களும் இருந்தன. ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்:

அரசாங்கப் பூர்வமான குறிப்பு: கோரேசின் முதலாம் ஆட்சி ஆண்டில், அவன் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்கு ஓர் கட்டளைக் கொடுத்தான். அந்த கட்டளை சொல்வது:

தேவனுடைய ஆலயம் மீண்டும் கட்டப்படட்டும். இது பலி கொடுப்பதற்குரிய இடமாக இருக்கும். இதற்குரிய அஸ்திபாரம் கட்டப்படட்டும். இந்த ஆலயம் 60 முழ உயரமும், 60 முழ அகலமுமாய் இருக்கட்டும். அதைச் சற்றி மூன்று வரிசை பெரிய கற்களும், ஒரு வரிசைப் பெரிய மரப்பலகைகளும் இருக்கட்டும். அரசனின் கருவூலத்திலிருந்து ஆலயம் கட்டப் பணம் கொடுக்கப்படும். தேவனுடைய ஆலயத்தில் உள்ள பொன்னும் வெள்ளியும் மீண்டும் அங்கேயே வைக்கப்பட வேண்டும். நேபுகாத்நேச்சார் அவற்றை எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டு போனான். அவை தேவனுடைய ஆலயத்தில் திரும்ப வைக்கப்பட வேண்டும்.

இப்போது, தரியுவாகிய நான், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், அப்பகுதியில் வசிக்கும் எல்லா அதிகாரிகளும் எருசலேமிற்கு வெளியே தங்கி இருங்கள் என்று கட்டளை கொடுக்கிறேன். வேலை செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தேவனுடைய ஆலய வேலையைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். யூத ஆளுநர்களும், யூதத் தலைவர்களும் ஆலயத்தை மீண்டும் கட்டட்டும். அவ்வாலயம் முன்பு இருந்த அதே இடத்திலேயே அவர்கள் கட்டட்டும்.

இப்போது இந்த கட்டளையை இடுகிறேன். யூதத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்ட நீங்கள் கீழ்க்கண்டச் செயல்களைச் செய்ய வேண்டும்: ஆலயம் கட்டுவதற்கான முழு பணத்தையும் நீங்கள் அரசனின் கருவூலத்தில் இருந்து தர வேண்டும். இப்பணம் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். இதனை விரைவாகச் செய்யுங்கள். அதனால் வேலை தடைப்படாமல் இருக்கும். அந்த ஜனங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுங்கள். அவர்களுக்கு இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடத் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுங்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் கோதுமை, திராட்சைரசம், உப்பு, ஒலிவ எண்ணெய் போன்றனவற்றைக் கேட்டால் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கவும். 10 இவற்றை நீங்கள் யூத ஆசாரியர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைக் கொடுத்து அவரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இவற்றைக் கொடுத்தால் ஆசாரியர்கள் எனக்கும் என் மகன்களுக்கும் ஜெபம் செய்வார்கள்.

11 அதோடு, இந்தக் கட்டளையையும் தருகிறேன்: யாராவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனது வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் பிடுங்கப்படும். பின்பு அம்மரச் சட்டம் அவனுடைய உடலில் சொருகப்படும். அவனது வீடும் மண் மேடாகும்வரை அழிக்கப்படும்.

12 தேவன் தமது நாமத்தை எருசலேமில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டளையை மாற்ற முயல்கிற எந்த அரசர்களையும் அல்லது எந்த ஜனங்களையும் தேவன் தோற்கடிப்பார் என்று நம்புகிறேன். யாராவது இந்த ஆலயத்தை எருசலேமில் அழிக்க முயன்றால் தேவன் அந்த நபரை அழித்துவிடுவார் என்று நம்புகிறேன்.

தரியுவாகிய நான், இந்தக் கட்டளையைத் தருகிறேன். இந்தக் கட்டளை முழுமையாகவும், விரைவாகவும் செய்யப்பட வேண்டும்!

ஆலயப் பணி முடிவும் பிரதிஷ்டையும்

13 எனவே, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநராக இருக்கும் தத்னாய் என்பவரும், சேத்தார்பொஸ்னாயும் அவர்களைச் சார்ந்த மற்ற ஜனங்களும், அரசன் தரியுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் அந்த கட்டளையை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தினார்கள். 14 எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது. 15 ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது.

16 அப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

17 இவ்வாறு தான் அவர்கள் தேவனுடைய ஆலயத்தை பிரதிஷ்டை செய்தது: அவர்கள் 100 காளைகள், 200 செம்மறியாட்டுக் கடாக்கள் மற்றும் 400 ஆண் ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றைப் பலி கொடுத்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களின் பாவப்பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக்கடாக்களைப் பலி கொடுத்தனர். அந்த 12 வெள்ளாடுகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்திற்கும் ஒன்று வீதம் கொடுக்கப்பட்டவை. 18 பிறகு அவர்கள் தங்கள் குழுவில் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்தனர். லேவியர்களை அவர்களின் குழுவிலும் தேர்ந்தெடுத்து எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலய வேலைக்கு நியமித்தனர். மோசேயின் புத்தகத்தில் சொன்னடியே அவர்கள் செய்து முடித்தார்கள்.

பஸ்கா

19 யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள். 20 ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர். 21 எனவே, இஸ்ரவேலின் அடிமைத்தனத்திலிருந்து மீட்புப் பெற்ற அனைத்து ஜனங்களும் பஸ்கா விருந்தை உண்டனர். அந்நாட்டிலுள்ள மற்றவர்கள் தம்மைக் கழுவி அந்நாட்டில் வசித்த ஜனங்களின் அசுத்தங்களிலிருந்து சுத்தம் செய்துக்கொண்டார்கள். இவ்வாறு சுத்தமானவர்களும் பஸ்கா விருந்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம், உதவிக்காகப் போக முடியும். 22 அவர்கள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை மிக மகிழ்ச்சியோடு ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். கர்த்தர் ஜனங்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். ஏனென்றால் அசீரியா அரசனின் போக்கையும் கர்த்தர் மாற்றியிருந்தார். எனவே அசீரியாவின் அரசனும் தேவனுடைய ஆலய வேலைக்கு பெரிதும் உதவியாக இருந்தான்.