A A A A A
Bible Book List

2 சாமுவேல் 7 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

தாவீது ஒரு ஆலயம் கட்ட விரும்புதல்

தாவீது தன் புதுவீட்டிற்குச் சென்றபின் கர்த்தர் அவனது பகைவர்களிடமிருந்து அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார். தாவீது அரசன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி, “பாரும், நான் தேவதாரு மரங்களால் அமைந்த அழகிய வீட்டில் வாழ்கிறேன். ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோ ஒரு கூடாரத்திலேயே இன்னும் வைக்கப்பட்டுள்ளது! பரிசுத்தப் பெட்டிக்கு அழகான நல்ல கட்டிடம் நாம் கட்ட வேண்டும்” என்றான்.

நாத்தான் தாவீது அரசனை நோக்கி, “நீர் செய்ய விரும்புகிறதைச் செய்யும். கர்த்தர் உம்மோடிருக்கிறார்” என்றான்.

ஆனால் அன்றிரவு, நாத்தானுக்கு கர்த்தருடைய செய்திக் கிடைத்தது.

கர்த்தர் நாத்தானிடம்,

“நீ என் தாசனாகிய தாவீதிடம் போய், ‘இதுவே கர்த்தர் சொல்வதாகும், நான் வாழவேண்டிய வீட்டைக் கட்டும் ஆள் நீ அல்ல. இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வந்தபோது நான் ஒரு வீட்டிலும் தங்கி வாழவில்லை. நான் ஒரு கூடாரத்திலேயே எல்லா இடங்களுக்கும் பயணமானேன். எனது வீடாக கூடாரத்தையே பயன்படுத்தினேன். தேவதாரு மரங்களாலாகிய அழகிய வீட்டை எனக்கு கட்டுமாறு நான் எந்த ஒரு இஸ்ரவேல் கோத்திரத்திற்கும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் கூறவில்லை’.

“நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது இதுவே: நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும்போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். நீ சென்ற எல்லா இடங்களிலும் நான் உன்னோடு இருந்தேன். உனக்காக உன் பகைவர்களை நான் முறியடித்தேன். உலகிலுள்ள மேன்மையான ஜனங்களைப்போல் உன்னையும் புகழ்பெறச் செய்வேன். 10-11 இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு, நான் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் இஸ்ரவேலரை நிலை நிறுத்தினேன். அவர்கள் வாழ்வதற்குரிய சொந்த இடத்தைக் கொடுத்தேன். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு அவர்கள் அலைந்து கொண்டிராதபடிக்கு நான் இதைச் செய்தேன். முன்பு இஸ்ரவேலரை வழிநடத்த நியாயாதிபதிகளை அனுப்பினேன். ஆனால் தீயோர் அவர்களுக்குத் தொல்லைகள் விளைவித்தனர். அத்தொல்லைகள் இப்போது வராது. உனது எல்லாப் பகைவர்களிடமிருந்தும் உனக்கு அமைதியளிக்கிறேன். உனது குடும்பத்தாரை அரசர்களாக்குவேன் என உனக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.

12 “‘உனது முதிர்வயதில், நீ மரித்து உனது முற்பிதாக்களோடு சேர்த்து புதைக்கப்படுவாய். அப்போது உனது சொந்த மகனை அரசனாக்குவேன். 13 அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன். 14 நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் பாவம் செய்கையில், பிறரால் அவனுக்குத் தண்டனை அளிப்பேன். அவர்கள் எனது சாட்டையாக இருப்பார்கள். 15 ஆனால் நான் அவனை என்றும் நேசியாமல் விட்டு விடமாட்டேன். அவனுக்கு உண்மையானவனாக என்றும் இருப்பேன். சவுலிடமிருந்து எனது அன்பையும் இரக்கத்தையும் நீக்கினேன். நான் உன்னிடம் திரும்பியபோது சவுலைத் தள்ளிவிட்டேன். ஆனால் உனது குடும்பத்தாருக்கு அவ்வாறு செய்யமாட்டேன். 16 உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

17 நாத்தான் தான் கண்ட தரிசனத்தைக் குறித்து தாவீதுக்குக் கூறினான். தேவன் கூறிய எல்லாவற்றையும் அவன் தாவீதிற்குக் கூறினான்.

தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான்

18 அப்போது தாவீது அரசன் உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான்.

தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? 19 நான் ஊழியக்காரனன்றி வேறெதுவுமல்ல. நீர் என்னிடம் மிகவும் இரக்கம் காட்டினீர். எனது எதிர்கால குடும்பம் பற்றியும் இரக்கமான சொற்களைக் கூறினீர்! கர்த்தராகிய என் ஆண்டவரே, நீர் எப்போதும் ஜனங்களிடம் இவ்வாறு பேசுவதில்லை அல்லவா? 20 நான் எவ்வாறு தொடர்ந்து உம்மோடு பேச முடியும்? கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது ஊழியன் என்பதை அறிவீர். 21 நீர் செய்வதாகக் கூறியதாலும் அவற்றைச் செய்ய விரும்புவதாலும் இந்த அற்புதமான காரியங்களை நீர் செய்வீர். இக்காரியங்கள் எல்லாவற்றையும் நான் அறிந்துகொள்ள நீர் முடிவு செய்தீர். 22 கர்த்தராகிய என் ஆண்டவரே, அதனால்தான் நீர் மிகவும் பெரியவர்! உம்மைப் போன்று வேறொருவரும் இல்லை. உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டிருப்பதால் அதை அறிவோம்.

23 “உமது ஜனங்களாகிய இஸ்ரவேலருடையதைப் போன்று இவ்வுலகில் வேறு எந்த ஜனங்களும் இல்லை. அவர்கள் விசேஷமான ஜனங்கள். அவர்கள் அடிமைகளாயிருந்தார்கள், ஆனால் நீர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்து விடுதலை அடைய வைத்தீர். அவர்களை உமது ஜனங்களாக மாற்றினீர். அவர்களை உமது ஜனங்களாக்கினீர். உமது ஜனங்களுக்காக பெரிய காரியங்களையும் அற்புதங்களையும் செய்தீர். உமது தேசத்திற்காக (நிலம்) அற்புதமான காரியங்களைச் செய்தீர். 24 என்றென்றும் உம்முடைய சொந்த ஜனங்களாக இஸ்ரவேலரைச் செய்தீர், கர்த்தாவே, நீர் அவர்கள் தேவனானீர்.

25 “இப்போது, தேவனாகிய கர்த்தாவே, உமது ஊழியக்காரனாகிய எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் சில காரியங்களைச் செய்ய வாக்குறுதி தந்தீர், நீர் வாக்குறுதி அளித்த காரியங்களை இப்போது செய்யும். என் குடும்பத்தை அரச குடும்பமாக எப்போதும் வைத்திரும். 26 அப்போது உமது பெயர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படும்! ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலை ஆளுகிறார். உமக்கு சேவை செய்வதில் உமது ஊழியக்காரனாகிய தாவீதின் குடும்பம் தொடர்ந்து வலிமை பெறட்டும்’ என்பார்கள்.

27 “சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்குப் பல காரியங்களைக் காட்டினீர். நீர், ‘உன் குடும்பத்தைப் பெருமைப்படுத்துவேன்’ என்றீர். அதனால் உமது தாசனாகிய நான் இப்பிரார்த்தனையை செய்கிறேன். 28 கர்த்தராகிய என் ஆண்டவரே, நீர் தேவன். நீர் கூறும் காரியங்களை நான் நம்பமுடியும், உமது ஊழியக்காரனாகிய எனக்கு இந்நல்ல காரியங்கள் ஏற்படும் என்று நீர் கூறினீர். 29 இப்போது தயவு செய்து என் குடும்பத்தை ஆசீர்வதியும். உமக்கு முன்பாக நின்று எப்போதும் ஊழியம் செய்யட்டும். கர்த்தராகிய என் ஆண்டவரே, நீரே இவற்றைக் கூறினீர். உம்முடைய ஆசீர்வாதம் என்றும் தொடரும். நீரே என் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center

  Back

1 of 1

You'll get this book and many others when you join Bible Gateway Plus. Learn more

Viewing of
Cross references
Footnotes