Add parallel Print Page Options

36 எலிகூ தன் பேச்சைத் தொடர்ந்தான். அவன்,

“என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும்.
    இன்னும் சில வார்த்தைகளைக் கூட நான் பேச தேவன் விரும்புகிறார்.
நான் எனது அறிவை எல்லோரோடும் பகிர்ந்துக்கொள்வேன், தேவன் என்னை உண்டாக்கினார்,
    தேவன் நியாயமானவரென நான் நிரூபிப்பேன்.
யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.
    நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன்.

“தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை.
    தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர்.
தேவன் தீய ஜனங்களை வாழவிடமாட்டார்,
    தேவன் ஏழைகளை எப்போதும் நியாயமாக நடத்துகிறார்.
தக்க வழியில் நடப்போரைத் தேவன் கண்ணோக்குகிறார்.
    அவர் நல்லோரை அரசர்களாயிருக்க அனுமதிக்கிறார்.
    தேவன் நல்லோருக்கு என்றென்றும் மகிமையைக் கொடுக்கிறார்.
எனவே ஜனங்கள் தண்டிக்கப்பட்டால், அவர்கள் விலங்குகளினாலும் கயிறுகளினாலும் கட்டப்பட்டால்,
    அப்போது அவர்கள் தவறு செய்தவர்களாயிருப்பார்கள்.
அவர்கள் செய்தது என்னவென்பதை தேவன் சொல்வார்.
    அவர்கள் பாவம் செய்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
    அவர்கள் பெருமையாயிருந்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
10 தேவன் தனது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்குமாறு அந்த ஜனங்களைக் கட்டாயப்படுத்துவார்.
    அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துமாறு தேவன் கட்டளையிடுவார்.
11 அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார்.
    அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
12 ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
    அவர்கள், அறியாமையுடையவர்களாக மரித்துப்போவார்கள்.

13 “தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள்,
    தேவன் அவர்களைத் தண்டிக்கிறபோதும் கூட, அவர்கள் தேவனிடம் உதவிக்காக ஜெபம் செய்ய மறுக்கிறார்கள்.
14 அவர்கள் ஆண் விபசாரிகளைப்போல
    இளமையிலேயே மரித்துப்போவார்கள்.
15 ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார்.
    ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார்.

16 “யோபுவே, தேவன் உனக்கு உதவ விரும்புகிறார்.
    தொல்லைகளிலிருந்து உன்னை விடுவிக்க தேவன் விரும்புகிறார்.
    உனக்கு வாழ்க்கையை எளிதாக்க தேவன் விரும்புகிறார்.
    உன் மேசையில் மிகுதியான உணவு இருக்கும்படியாகச் செய்ய தேவன் விரும்புகிறார்.
17 ஆனால் இப்போது யோபுவே, நீ குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டாய்.
    எனவே ஒரு தீயவனைப்போன்று நீ தண்டிக்கப்பட்டாய்.
18 யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும்.
    பணம் உனது மனதை மாற்றவிடாதேயும்.
19 உனது பணம் இப்போது உனக்கு உதவாது.
    வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது.
20 இரவின் வருகையை விரும்பாதேயும்.
    ஜனங்கள் இரவில் மறைந்துபோக முயல்கிறார்கள்.
    அவர்கள் தேவனிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.
21 யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய்.
    ஆனால் தீமையைத் தேர்ந்துகொள்ளாதேயும்.
    தவறு செய்யாதபடி எச்சரிக்கையாயிரும்.

22 “தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார்.
    தேவன் எல்லோரினும் மிகவும் சிறந்த போதகர்!
23 தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது.
    ‘தேவனே, நீர் தவறு செய்கிறீர்’ என்று ஒருவனும் தேவனிடம் கூற முடியாது!
24 தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவுகூருங்கள்.
    தேவனைத் துதிக்கும் பல பாடல்களை ஜனங்கள் எழுதியிருக்கிறார்கள்.
25 தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும்.
    தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும்.
26 ஆம், தேவன் மேன்னைமயானவர்.
    ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.

27 “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து,
    அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.
28 ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன.
    மழை பலர் மீது பெய்கிறது.
29 தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும்
    வானத்தில் இடி முழக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது.
30 பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி,
    சமுத்திரங்களின் ஆழமான பகுதிகளை மூடினார்.
31 தேசங்களை அடக்கியாள்வதற்கும்
    அங்கு மிகுதியான உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்கும், தேவன் அவற்றைப் பயன்படுத்துகிறார்.
32 தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார்,
    அவருக்கு விருப்பமான இடங்களில் தாக்குமாறு அதற்குக் கட்டளையிடுகிறார்.
33 புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது.
    அது வந்துகொண்டிருப்பதை ஆடு, மாடுகள் கூட அறிகின்றன” என்றான்.