Add parallel Print Page Options

யோனா மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது, அவன் தனது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்தான். யோனா,

“நான் மிக மோசமான துன்பத்தில் இருந்தேன்.
    நான் உதவிக்காகக் கர்த்தரை வேண்டினேன்.
    அவர் எனக்குப் பதில் கொடுத்தார்.
நான் பாதாளத்தின் ஆழத்தில் இருந்தேன்.
    கர்த்தாவே, நான் உம்மிடம் கதறினேன்.
    நீர் எனது குரலைக் கேட்டீர்.

“நீர் என்னைக் கடலுக்குள் எறிந்தீர்.
    உமது வல்லமையுடைய அலைகள் என்மேல் வீசின.
நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றேன்.
    என்னைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது.
பிறகு நான் நினைத்தேன், ‘இப்போது நான் உம் பார்வையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளேன்.’
    ஆனால், நான் தொடர்ந்து உதவிக்காக உமது பரிசுத்த ஆலயத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“கடல் தண்ணீர் என்னை மூடியது.
    தண்ணீரானது எனது வாயை நிறைத்தது.
    என்னால் சுவாசிக்க முடியவில்லை.
நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழமாகச் சென்றேன்.
    கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
நான் மலைகள் துவங்குகிற கடலின் ஆழத்திற்குச் சென்றேன்.
    நான் இந்தச் சிறைக்குள் என்றென்றும் இருப்பேனோ என்று நினைத்தேன்.
ஆனால் எனது கல்லறையிலிருந்து என்னை என் தேவனாகிய கர்த்தர் மீட்டார்.
    தேவனே, நீர் எனக்கு மீண்டும் உயிர்கொடுத்தீர்.

“எனது ஆத்துமா எல்லா நம்பிக்கையையும் இழந்தது.
    ஆனால், பிறகு நான் கர்த்தரை நினைத்தேன்.
கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்,
    நீர் உமது பரிசுத்தமான ஆலயத்திலிருந்து எனது ஜெபத்தைக் கேட்டீர்.

“சிலர் பயனற்ற விக்கிரகங்களை தொழுகின்றார்கள்.
    ஆனால், அந்தச் சிலைகள் அவர்களுக்கு உதவுவதில்லை.
கர்த்தர் ஒருவரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது.
    கர்த்தாவே, நான் உமக்குப் பலிகளை கொடுப்பேன்.
நான் உம்மைத் துதித்து, உமக்கு நன்றி சொல்வேன். நான் உம்மிடம் சிறப்பு வாக்குறுதிகளைச் செய்வேன்,
    நான் வாக்குறுதிப்படி செய்வேன்” என்றான்.

10 பிறகு கர்த்தர் மீனோடு பேசினார். மீன் யோனாவை தன் வயிற்றிலிருந்து உலர்ந்த நிலத்தில் கக்கிவிட்டது.