Add parallel Print Page Options

22 ஒருவன் செல்வந்தனாக இருப்பதைவிட மரியாதைக்குரியவனாக வாழ்வது நல்லது. பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது.

செல்வந்தராக இருப்பினும் ஏழைகளாக இருப்பினும் எல்லாரும் சமமே. அனைவரையும் கர்த்தரே படைத்துள்ளார்.

அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள்.

கர்த்தரை மதித்துப் பணிவுள்ளவர்களாக இருங்கள். அப்போது உங்களுக்குச் செல்வமும் மதிப்பும் உண்மையான வாழ்வும் கிடைக்கும்.

தீயவர்கள் பல துன்பங்களில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் ஆத்துமாவைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பவர்கள் துன்பங்களிலிருந்து விலகி வாழ்கின்றனர்.

ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான்.

ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறான்.

துன்பத்தை விதைக்கிறவன் துன்பத்தையே அறுக்கிறான். முடிவில் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பத்தாலேயே அவன் அழிந்துபோகிறான்.

தாராளமாகக்கொடுப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். தன் உணவை ஏழைகளோடு பகிர்ந்துகொள்வதால் அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

10 ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும்.

11 நீ சுத்தமான இருதயத்தையும் கருணைமிக்க வார்த்தைகளையும் விரும்புகிறவனாயிருந்தால் அரசனும் உனக்கு நண்பன் ஆவான்.

12 தேவனை அறிகின்ற ஜனங்களை கர்த்தர் கவனித்து காப்பாற்றுகிறார். ஆனால் தனக்கு எதிரானவர்களை அவர் அழித்துப்போடுகிறார்.

13 சோம்பேறியோ, “என்னால் வேலைக்குப் போகமுடியாது. வெளியே ஒரு சிங்கம் உள்ளது. அது என்னைக்கொன்றுவிடும்” என்று கூறுகிறான்.

14 விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார்.

15 சிறுவர்கள் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவற்றைச் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.

16 நீ செல்வந்தனாகும்பொருட்டு ஏழைகளைத் துன்புறுத்துவதும், செல்வந்தர்களுக்கு அன்பளிப்புகளைக்கொடுப்பதும் ஆகிய இரண்டு செயல்களும் உன்னை ஏழையாக்கும்.

முப்பது ஞானமொழிகள்

17 நான் சொல்லுகிறதைக் கவனியுங்கள். அறிவாளிகள் சொல்லியிருக்கின்றவற்றை நான் உங்களுக்குப் போதிக்கிறேன். இப்போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 18 நீ இவற்றை நினைவில் வைத்திருந்தால் இது உனக்கு நல்லது. நீ இவ்வார்த்தைகளைச் சொன்னால் இவை உனக்கு உதவியாக இருக்கும். 19 இப்பொழுது இவற்றை நான் உனக்கு போதிக்கிறேன். நீ கர்த்தரை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 20 நான் உனக்காக முப்பது அறிவுரைகளை எழுதியிருக்கிறேன். இவை அறிவும் ஞானமும் உடையவை. 21 இவை உனக்கு உண்மையானவற்றையும் முக்கியமானவற்றையும் போதிக்கும். அப்போது உன்னை அனுப்பியவருக்கு நீ நல்ல பதில்களைக் கூறமுடியும்.

— 1 —

22 ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே. 23 கர்த்தர் அவர்கள் பக்கம் இருக்கிறார். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்கிறார்.

— 2 —

24 மிக சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்புகொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. 25 நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும்.

— 3 —

26 அடுத்தவன் பட்ட கடனுக்குப் பொறுப்பேற்பதாக நீ வாக்குறுதி தராதே. 27 உன்னால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாவிட்டால், உன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துபோவாய். நீ தூங்கும் படுக்கையை எதற்காக இழக்கவேண்டும்?

— 4 —

28 உன் முற்பிதாக்களால் குறிக்கப்பட்ட பழைய எல்லை அடையாளங்களை மாற்றாதே.

— 5 —

29 ஒருவன் தனது வேலையில் திறமையுடையவனாக இருந்தால் அவன் அரசனிடம் பணியாற்றும் தகுதியைப் பெறுகிறான். அவன், முக்கியமில்லாதவர்களுக்குப் பணியாற்றும் தேவை இருக்காது.