Add parallel Print Page Options

தானியேலின் ஜெபம்

தரியு அரசனான முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெயருடையவனின் மகன். தரியு மேதிய குலத்தை சேர்ந்தவன். அவன் பாபிலோனின் அரசனானான். தரியு அரசனாக இருந்த முதலாம் ஆண்டில் தானியேலான நான், சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புத்தகங்களில், கர்த்தர் எரேமியா தீரிக்கதரிசியிடம் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு முன் எத்தனை வருடங்கள் கடந்து செல்லும் என்று சொல்லியிருந்ததை நான் பார்த்தேன். கர்த்தர் 70 ஆண்டுகள் கடந்து செல்லும் என்று கூறினார்.

பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன்.

நான் என் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தேன். நான் எனது எல்லாப் பாவங்களையும் அவரிடம் சொன்னேன்.

நான், “கர்த்தாவே, நீர் மகத்துவமும் பயங்கரமும் வாய்ந்த தேவன். நீர் உம்மிடம் அன்பு செய்கிற ஜனங்களிடம் உமது அன்பும் கருணையும் உள்ள உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறீர். உமது கற்பனைகளுக்கு அடிபணிகிறவர்களுக்கு உமது உடன்படிக்கையைக் காப்பாற்றுகிறீர்.

“ஆனால் கர்த்தாவே, நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் தவறு செய்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் உமது கற்பனைகளையும் சரியான நியாயங்களையும் விட்டு விலகிப்போனோம். நாங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் காது கொடுத்து கவனிக்கவில்லை. அவர்கள் உமது ஊழியர்கள். தீர்க்கதரிசிகள் உமக்காகப் பேசினார்கள். அவர்கள் எங்கள் அரசர்களிடமும், எங்கள் தலைவர்களிடமும், எங்கள் தந்தைகளிடமும் பேசினார்கள். அவர்கள் இஸ்ரவேலிலுள்ள எல்லா ஜனங்களிடமும் பேசினார்கள். ஆனால் நாங்கள் அத்தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை.

“கர்த்தாவே, நீர் நல்லவர். நீதி உமக்கே உரியது. ஆனால் இன்று வெட்கக்கேடு எங்களுக்கு உரியதாயிற்று. யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஜனங்களுக்கு அவமானம் உரியதாயிற்று. அவமானம் இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் உமக்கு அருகிலே உள்ள ஜனங்களுக்கும் உமக்குத் தொலைவிலே உள்ள ஜனங்களுக்கும் உரியதாயிற்று. கர்த்தாவே, அந்த ஜனங்களை நீர் பலதேசங்களில் சிதறடித்தீர். அத்தேசங்களிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அவமானப்படுவார்களாக. கர்த்தாவே, அவர்கள் உமக்கு எதிராகச் செய்த அனைத்து கேடுகளுக்கும் அவமானப்படுவார்களாக.

“கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் அவமானப்படவேண்டும். எங்களது எல்லா அரசர்களும் தலைவர்களும் அவமானப்படவேண்டும். எங்கள் முற்பிதாக்களும் அவமானப்படவேண்டும். ஏனென்றால், நாங்கள் உமக்கு எதிராகப் பாவங்கள் செய்தோம்.

“ஆனாலும் கர்த்தாவே, நீர் தயவுடையவர் நீர் ஜனங்கள் செய்த தீமைகளை மன்னித்துவிடுகிறீர். நாங்கள் உண்மையில் உமக்கு எதிராகத் திரும்பினோம். 10 நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை. கர்த்தர் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளை அனுப்பி எங்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். ஆனால் நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. 11 இஸ்ரவேலில் உள்ள எந்த ஜனங்களும் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவில்லை. மோசேயின் சட்டத்தில் சாபங்களும் வாக்குத்தத்தங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. (மோசே தேவனுடைய ஊழியன்). அச்சாபங்களும் வாக்குத்தத்தங்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. அவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

12 “தேவன், எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் இவை ஏற்படும் என்று சொன்னார். அவர் அவை எங்களுக்கு ஏற்படும்படிச் செய்தார். அவர், எங்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும்படிச் செய்தார். எருசலேம் துன்பப்பட்டது போன்று வேறெந்த நகரமும் துன்பப்பட்டதில்லை. 13 அந்தப் பயங்கரமானவை எல்லாம் எங்களுக்கு ஏற்பட்டன. மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடியே இவை நிகழ்ந்தன. ஆனால் நாங்கள் இன்னும் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை. நாங்கள் இன்னும் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. கர்த்தாவே நாங்கள் உமது சத்தியத்தில் கவனம் செலுத்தவில்லை. 14 கர்த்தர் எங்களுக்காகப் பயங்கரமானவற்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அவை எங்களுக்கு ஏற்படும்படி அவர் செய்தார். கர்த்தர் இதனைச் செய்தார். ஏனென்றால் அவர் செய்கிற எல்லாவற்றிலும் நியாயமாக இருந்தார். ஆனால் நாங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறோம்.

15 “கர்த்தாவே, எங்கள் தேவனே, உமது வல்லமையைப் பயன்படுத்தி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். நாங்கள் உமது ஜனங்கள். இதன் மூலம் இன்றும் நீர் புகழ்பெற்று விளங்குகிறீர். கர்த்தாவே நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறோம். 16 கர்த்தாவே, எருசலேம் மீது கொண்ட கோபத்தை நிறுத்தும். எருசலேம் உமது பரிசுத்தமான மலையின் மீது இருக்கிறது. நீர் சரியானவற்றையே செய்கிறீர். எனவே எருசலேம் மீதுள்ள கோபத்தை நிறுத்தும். எங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்கள் உமது ஜனங்களைக் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

17 “இப்பொழுதும், கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது ஊழியன். உதவிக்கான என்னுடைய ஜெபத்தைக் கேளும். உமது பரிசுத்தமான இடத்திற்கு நன்மையைச் செய்யும். அந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டவரே, உமது பரிசுத்தமான இடத்தினிமித்தம் இந்நன்மையைச் செய்யும். 18 என் தேவனே, என்னைக் கவனித்துக் கேளும்! உமது கண்களைத் திறந்து, எங்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களைப் பாரும். உமது நாமத்தால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு என்ன நேரிட்டது என்று பாரும்! நாங்கள் நல்ல ஜனங்கள் என்று நான் சொல்லவில்லை. அதற்காகத்தான் நான் இவற்றையெல்லாம் கேட்கவில்லை. நான் இவற்றைக் கேட்கிறேன். ஏனென்றால் நான் உமது இரக்கத்தை அறிவேன். 19 கர்த்தாவே, என்னைக் கவனித்துக் கேளும். கர்த்தாவே எங்களை மன்னியும். கர்த்தாவே கவனித்து, ஏதாவது செய்யும். காத்திருக்கவேண்டாம். இப்பொழுது ஏதாவது செய்யும். இதனை உமது மகிமைக்காகச் செய்யும். என் தேவனே, இப்பொழுது உமது நாமத்தால் அழைக்கப்படுகிற உமது நகரத்துக்காகவும், உமது ஜனங்களுக்காகவும் ஏதாவது செய்யும்” என்றேன்.

70 வாரங்கள் பற்றிய தரிசனம்

20 நான் எனது ஜெபத்தில் தேவனிடம் இவற்றைச் சொன்னேன். நான் எனது பாவங்களைப் பற்றியும், இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் தேவனுடைய பரிசுத்தமான மலைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். 21 நான் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, காபிரியேல் என்ற தூதன் என்னிடம் வந்தான். காபிரியேல் நான் தரிசனத்தில் பார்த்த மனிதன். காபிரியேல் விரைவாக என்னிடம் பறந்துவந்தான். அவன் மாலைப் பலி நேரத்தில் வந்தான். 22 காபிரியேல், நான் அறிய விரும்பியவற்றை நான் புரிந்துகொள்ள உதவினான். காபிரியேல் என்னிடம், “தானியேலே, நான் உனக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுக்க வந்திருக்கிறேன். 23 நீ முதலில் ஜெபிக்க ஆரம்பித்தபோதே எனக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. நான் உன்னிடம் சொல்ல வந்தேன். தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். இந்தக் கட்டளையை நீ புரிந்துகொள்வாய். நீ இந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்வாய்.

24 “தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன.

25 “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும். 26 62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.

27 “பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.