Add parallel Print Page Options

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்

46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
    தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
எனவே பூமி நடுங்கினாலும்,
    மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
    பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
    மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
    சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
    கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
    அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
    வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
    இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.

10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
    நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.

11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.