Add parallel Print Page Options

தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்

142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
    நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
    நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
    நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
    ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.

நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
    எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
    கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
    கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
    என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
    அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
    நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.