Add parallel Print Page Options

எருசலேம் என்னும் திராட்சைக்கொடி எரிக்கப்படும்

15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது, அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, காட்டிலுள்ள மரங்களிலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளை விட திராட்சைக் கிளைகளின் குச்சி சிறந்ததா? இல்லை! திராட்சைக் கொடியிலிருக்கும் மரத்துண்டை நீ எதற்காவது பயன்படுத்த முடியுமா? இல்லை! அந்த மரத்தைக் கொண்டு பாத்திரங்களைத் தொங்கவிடும் முளைகளைச் செய்யமுடியுமா? இல்லை! ஜனங்கள் அவற்றை தீயில்தான் போடுவார்கள். சில குச்சிகள் முனைகளில் எரியத்தொடங்கும். நடுப்பகுதி நெருப்பால் கறுப்பாகும். அக்குச்சிகள் முழுவதும் எரியாது. அக்குச்சிகளை நீ வேறு எதற்கும் பயன்படுத்த முடியுமா? அவை எரிவதற்கு முன்னமே அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றால், பிறகு அவை எரிந்தபின் அவற்றைப் பயன்படுத்தவேமுடியாது! எனவே திராட்சைக் கொடியிலுள்ள குச்சிகளும் காட்டிலுள்ள மற்ற மரங்களின் குச்சிகளைப் போன்றவைதான். ஜனங்கள் அம்மரத்துண்டுகளை நெருப்பில் எறிவார்கள்.” நெருப்பு அவற்றை எரிக்கும்! அதுபோலவே, நானும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நெருப்பில் எறிவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார். “நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். ஆனால் ஜனங்களில் சிலர் முழுவதும் எரியாத குச்சிகளைப்போன்றுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை. அந்த ஜனங்களை நான் தண்டித்தேன் என்பதை நீ பார்ப்பாய். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்! நான் அந்த நாட்டை அழிப்பேன். ஏனென்றால் ஜனங்கள் பொய்த் தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.