Add parallel Print Page Options

17 எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். 18 உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்.

கவனிப்பதும் கீழ்ப்படிவதும்

19 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாகவும், கோபிப்பதில் தாமதமாகவும் இருங்கள். 20 ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது. 21 எனவே உங்களைச் சுற்றி மிகுந்த அளவில் இருக்கிற எல்லாவிதமான அழுக்கையும், தீமையையும் நீங்கள் ஒழித்துவிட்டு உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற வல்ல போதனையைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

22 தேவன் சொல்கிறபடி செய்கிறவர்களாக இருங்கள். போதனையைக் கேட்கிறவர்களாக மட்டுமே இருந்து தம்மைத் தாமே வஞ்சித்துக்கொள்கிறவர்களாக இருக்காதீர்கள். 23 ஒருவன் தேவனுடைய போதனையைக் கேட்டுவிட்டு எதுவும் செயல்படாமல் இருந்தால் அது ஒருவன் கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தைத் தானே பார்த்துக்கொள்வது போன்றது ஆகும். 24 அவன் தன்னைத் தானே பார்த்து, அந்த இடம் விட்டுப் போனபிறகு தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். இதுவும் அதைப் போன்றதுதான். 25 முழுமையான தேவனுடைய சட்டத்தை ஆழமாக ஆராய்ந்து, கேட்டு மறந்துவிடுகிறவனாக இல்லாமல் தொடர்ந்து அதைப் படித்து அதன்படி நடக்கிறவன் தான் செய்வதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறான். தேவனுடைய சட்டம் மக்களை விடுதலையடையச் செய்கிறது.

தேவனை வழிபடுகிற உண்மையான வழி

26 தெய்வ பக்தி உள்ளவன் என ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தன் நாக்கை அவன் அடக்கிக்கொள்ளவில்லையெனில், தன்னைத்தானே அவன் முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன் “தெய்வ பக்தி” பயனற்றதாக இருக்கின்றது. 27 பிதாவாகிய தேவன் தூய்மையானதும் குற்றமற்றதுமென எண்ணுகிற வழிபாடு என்பது உதவி தேவைப்படுகிற விதவைகள், அனாதைகள் ஆகியோர்மேல் அக்கறை கொள்வதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்வதுமே ஆகும்.

Read full chapter