Add parallel Print Page Options

அரசனான எசேக்கியா தீர்க்கதரிசியான ஏசாயாவோடு பேசியது

19 அரசனான எசேக்கியா அவற்றைக் கேள்விப்பட்டான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு முரட்டு துணியை அணிந்தான். தனது துக்கத்தையும் பாதிப்பையும் வெளிப்படுத்தினான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான்.

அவன் ஆமோத்சின் மகனான தீர்க்கதரிசி ஏசாயாவிடம் அரண்மனை விசாரிப்புக்காரனான எலியாக்கீம் என்பவனையும், செயலாளனான செப்னா என்பவனையும், மூத்த ஆசாரியர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும் முறையில் முரட்டு ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் ஏசாயாவிடம், “‘இன்று பிரச்சனைக்குரிய நாள். நாம் தவறாக உள்ளோம் என்பதைக் காட்டும் நாள். இது குழந்தைகளின் பிரசவ காலம் போல உள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதற்கோ பலமில்லை. அசீரிய அரசனின் தளபதியால், ஜீவனுள்ள தேவனைப்பற்றிய கெட்டசெய்திகள் சொல்லி அனுப்பப்பட்டன. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவை எல்லாவற்றையும் கேட்கலாம். ஒருவேளை கர்த்தர் பகைவனைத் தண்டிக்கலாம். இப்போதும் உயிரோடுள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்க’ என்று எசேக்கியா கூறினார்” என்றான்.

எசேக்கியா அரசனின் அதிகாரிகள் ஏசாயாவிடம் சென்றனர். ஏசாயா அவர்களிடம், “எசேக்கியா என்னும் உங்கள் அரசனிடம் இதைக் கூறுங்கள்: ‘என்னைப்பற்றி அசீரியாவின் அதிகாரிகள் வேடிக்கையாகச் சொன்னதைப்பற்றி பயப்படவேண்டாம். நான் அவனில் ஒரு ஆவியை வைப்பேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்பான். பிறகு அவன் தன் சொந்த நாட்டில் வாளால் கொல்லப்படும்படி செய்வேன்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்று சொன்னான்.

எசேக்கியாவை அசீரிய அரசன் மீண்டும் எச்சரிக்கிறான்

அசீரிய அரசன் லாகீசை விட்டுப் புறப்பட்டுவிட்டதை அசீரிய தளபதி கேள்விப்பட்டான். அவன் திரும்பி வந்து தனது அரசன் லிப்னாவில் சண்டையிடுவதாக அறிந்தான். அசீரிய அரசன் எத்தியோப்பியா அரசனான தீராக்காப்பற்றி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டான். அது, “உனக்கு எதிராக சண்டையிட தீராக்கா வந்துள்ளான்!”. என்று சொன்னது.

எனவே அசீரிய அரசன் மீண்டும் ஒரு தூதுவனை எசேக்கியாவிடம் அனுப்பினான். அவன் அவர்களிடம் செய்தியைச் சொன்னான். அவன் சொன்னது: 10 யூத அரசனான எசேக்கியாவிடம் கூறுங்கள்:

“‘நீ நம்புகின்ற தேவன் உன்னை முட்டாளாக்குவதற்கு விடாதே. அவனோ, “அசீரிய அரசன் எருசலேம் நகரை வெல்லமாட்டான்!” என்று சொல்கிறான். 11 அசீரிய அரசன் மற்ற நாடுகளில் செய்துள்ளவற்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாங்கள் அவற்றை முழுமையாக அழித்துவிட்டோம்! நீ காப்பாற்றப்படுவாயா? இல்லை! 12 அந்நாட்டின் தெய்வங்கள் அந்நாட்டு ஜனங்களைக் காப்பற்றவில்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். கோசான், ஆரான், ரேத்சேப், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்கள் ஆகியோரையும் அழித்தனர்! 13 ஆமாத்சின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர் வாயிம் நகர அரசன் எங்கே? ஏனா ஈவா நகரங்களின் அரசர்களும் எங்கே? அவர்கள் அழிக்கப்பட்டார்கள்’” என்றான்.

எசேக்கியா கர்த்தரிடம் ஜெபிக்கிறான்

14 தூதுவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கி எசேக்கியா வாசித்துப் பார்த்தான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். அக்கடிதத்தைக் கர்த்தருக்கு முன்பாக வைத்தான். 15 கர்த்தருக்கு முன்னால் ஜெபம் செய்து, “கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் அரசன். நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். 16 கர்த்தாவே, நான் சொல்வதைக் கேளும். கர்த்தாவே, உமது கண்களை திறந்து இக்கடிதத்தைப் பாரும். சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்தித்து சொன்ன வார்த்தைகளைக் கேளும்! 17 கர்த்தாவே இது உண்மை. அசீரிய அரசன் இந்த ஜனங்களையும் இந்த நாடுகளையும் அழித்துவிட்டான்! 18 அவர்கள் அந்த ஜனங்களின் தெய்வங்களை நெருப்பிலே தூக்கியெறிந்தார்கள். ஆனால் அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவை மனிதர்களால் செய்யப்பட்ட மரத்தாலும் கல்லாலும் ஆன சிலைகள். அதனால் தான் அசீரிய அரசர்கள் அவற்றை அழிக்க முடிந்தது. 19 எனவே இப்போது தேவனாகிய கர்த்தாவே அசீரிய அரசனிடமிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு பூமியிலுள்ள அனைத்து அரசுகளும் நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்ளும்” என்றான்.

தேவன் எசேக்கியாவிற்கு பதில் தருகிறார்.

20 அப்போது அமோத்சின் மகனான ஏசாயா எசேக்கியாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினான். அவன், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘நீ அசீரிய அரசனான சனகெரிபிற்கு எதிராக செய்த ஜெபங்களை நான் கேட்டுக்கொண்டேன்’ என்று சொன்னார்” என்றான்.

21 “சனகெரிப் பற்றிய கர்த்தருடைய செய்தி இவ்வாறு இருந்தது:

“சீயோனின் (எருசலேமின்) கன்னிப் பெண் உன்னை முக்கியமாக நினைக்கவில்லை.
    உன்னைப் பற்றி கேலிச்செய்கிறாள்!
எருசலேமிலுள்ள பெண் அவளது தலையை உனக்குப் பின்னால் குலுக்குகிறாள்.
22 ஆனால் நீ அவமானப்படுத்தியதும் கேலிச்செய்ததும் யாரை?
    யாருக்கு எதிராக நீ உனது குரலை உயர்த்தியிருக்கிறாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தமானவருக்கு எதிரானவன்!
    நீ அவரைவிடச் சிறந்தவனைப் போல் நடித்தாய்!
23 கர்த்தரை அவமானப்படுத்தவே நீ உன் தூதுவர்களை அனுப்பினாய்.
    ‘நான் ஏராளமான இரதங்களோடு மலை உச்சிகளுக்கும், லீபனோனின் உள்புறத்துக்கும் வந்தேன்.
நான் லீபனோனின் உயர்ந்த கேதுரு மரங்களையும் சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன்.
    நான் லீபனோனின் உயர்ந்த பகுதிகளுக்கும் அடர்ந்த காடுகளுக்கும் போனேன்.
24 நான் புதிய இடங்களில் கிணறுகளைத் தோண்டி தண்ணீரைக் குடித்தேன்.
    நான் எகிப்து ஆறுகளை வற்றச்செய்து அந்த நாட்டினில் நடந்து சென்றேன்’ என்று சொன்னாய்.

25 “இதைத்தான் நீ சொன்னாய்
ஆனால் தேவன் சொன்னதை நீ கேட்டிருக்கவில்லை.
    நான் (தேவன்) நீண்ட காலத்திற்கு முன்பே அதனைத் திட்டமிட்டேன்.
பழங்காலத்திலிருந்தே நான் அதனைத் திட்டமிட்டேன்.
    இப்போது, நிகழும்படி செய்கிறேன்.
கோட்டையமைந்த நகரங்களை அழிக்க உன்னை அனுமதித்தேன்.
    அவற்றை பாறைகளாகும்படி மாற்றினேன்.
26 அந்நகரங்களில் உள்ள ஜனங்களுக்கு சக்தி இருக்கவில்லை.
    அந்த ஜனங்கள் பயந்து, குழம்பினார்கள்.
அவர்கள் வயல் புறத்தில் வெட்டி எறியப்படப்போகிற புல்லைப் போலவும், செடியைப் போலவும் இருந்தார்கள்.
    அவர்கள் வீட்டின்மேல் வளர்ந்த செடியைப் போன்றவர்கள்.
    வளர்வதற்கு முன்பே அழிந்துப்போனவர்கள்.
27 நீ உட்கார்ந்திருப்பதையும் நான் அறிவேன்.
    நான் நீ போருக்குப்போகும் பொழுதையும் அறிவேன்.
நீ வீட்டிற்கு வந்ததையும் அறிவேன்.
    நீ என்னிடம் அலுத்துக் கொண்டதையும் அறிவேன்.
28 ஆமாம் நீ என்னிடம் அலுத்துக்கொண்டாய்.
    உனது பெருமிதமான நிந்தனைகளைக் கேட்டேன்.
எனவே நான் உனது மூக்கில் துறட்டை மாட்டுவேன்.
    நான் உனது வாயிலே எனது கடிவாளத்தை மாட்டுவேன்.
பிறகு நான் உன்னை சுற்றிவிடுவேன்.
    வந்த வழியே திரும்பிப்போகச் செய்வேன்” என்றார்.

எசேக்கியாவிற்கு கர்த்தருடைய செய்தி

29 “நான் உனக்கு உதவி செய்வேன் என்பதற்கு இதுதான் அடையாளம்: இவ்வாண்டில் நீங்கள்தானாக விளைந்த தானியங்களைத் தின்பீர்கள். அடுத்த ஆண்டு அதன் விதையில் வளர்ந்த தானியத்தை உண்பீர்கள். ஆனால் மூன்றாவது ஆண்டில் நீங்கள் பயிர் செய்தவற்றிலிருந்து தானியத்தை பெறுவீர்கள். நீங்கள் திராட்சைத் தோட்டங்களைப் பயிர்செய்து அவற்றிலுள்ள திராட்சைப் பழங்களை உண்பீர்கள். 30 யூதாவின் குடும்பத்திலிருந்து தப்பித்து பிழைத்த ஜனங்கள் மீண்டும் வளரத் தொடங்குவார்கள். 31 ஏனென்றால் சிலர் உயிரோடு இருப்பார்கள். அவர்கள் எருசலேமைவிட்டு வெளியேறுவார்கள். உயிர் பிழைத்தவர்கள் சீயோன் மலையிலிருந்து வெளியேறுவார்கள். கர்த்தருடைய உறுதியான வைராக்கியமே இதைச்செய்யும்.

32 “எனவே, அசீரிய அரசனைப்பற்றிக் கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்:

‘அவன் இந்நகரத்திற்குள் வரமாட்டான்.
    அவன் இந்நகரத்திற்குள் ஒரு அம்பையும் எய்யமாட்டான்.
அவன் இந்நகரத்திற்குள் கேடயங்களைக் கொண்டு வரமாட்டான்.
    அவன் இந்நகரச் சுவர்களைத் தாக்குவதற்கு கொத்தளம் அமைக்கப்போவதில்லை.
33 அவன் வந்த வழியாகவே திரும்பிப் போவான்.
    அவன் இந்நகரத்திற்குள் வரமாட்டான். இதனைக் கர்த்தர் கூறுகிறார்!
34 நான் இந்நகரத்தைப் பாதுகாத்து காப்பாற்றுவேன்.
    இதனை நான் எனக்காகவும் என் தொண்டன் தாவீதிற்காகவும் செய்வேன்.’”

அசீரியப்படை அழிந்தது

35 அன்று இரவு, கர்த்தருடைய தூதன் போய் 1,85,000 ஜனங்களை அசீரியப் படையில் கொன்று போட்டான். ஜனங்கள் காலையில் எழுந்தபோது, மரித்த உடல்களைப் பார்த்தனர்.

36 எனவே அசீரிய அரசனான சனகெரிப் என்பவன் விலகிப்போய் நினிவே நகரத்திற்கு திரும்பிப் போனான். 37 ஒரு நாள் சனகெரிப் தனது தெய்வமான நிஸ்ரோகின், ஆலயத்தில் தொழுகை செய்துக்கொண்டிருந்தான். அப்போது அவனை அவனது மகன்களான அத்ரமலேக் என்பவனும் சரேத்சேர் என்பவனும் சேர்ந்து வாளால் கொன்றனர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஆரராத் நாட்டிற்கு ஓடினார்கள். சனகெரிப்பிற்குப் பிறகு அவனது மகன் எசரத்தோன் என்பவன் புதிய அரசன் ஆனான்.