Add parallel Print Page Options

12 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ கலகக்காரர்களின் மத்தியில் வாழ்கிறாய். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர். நான் அவர்களுக்காகச் செய்ததைப் பார்க்க அவர்களிடம் கண்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அவற்றைப் பார்க்கவில்லை. நான் அவர்களிடம் செய்யச் சொல்வதைக் கேட்க அவர்களிடம் காதுகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் எனது ஆணைகளைக் கேட்கவில்லை. ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள். எனவே, மனுபுத்திரனே, உனது பைகளைக்கட்டு, நீ தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நடி. இவ்வாறு செய். இதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். அவர்கள் உன்னைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் கலகக்காரர்கள்.

“பகல் நேரத்தில், உனது பைகளை வெளியே வை, அதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். பிறகு மாலையில், ஒரு கைதி தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நீ புறப்படு. ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போது சுவற்றில் ஒரு துவாரமிட்டு, அத்துவாரத்தின் வழியாக வெளியே போ. இரவில், உனது பைகளைத் தோளில் போட்டுக்கொண்டு விலகிப்போ. உன் முகத்தை மூடிக்கொள். அதனால் நீ போகும்போது உன்னால் பார்க்க முடியாமல்போகும். நீ இவற்றையெல்லாம் செய்யவேண்டும். எனவே ஜனங்கள் உன்னைப் பார்க்கமுடியும். ஏனென்றால், இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவேன்.”

எனவே நான் (எசேக்கியேல்) கட்டளையிடப்பட்டபடி செய்தேன். பகல் பொழுதில், எனது பைகளை எடுத்துகொண்டு தூரநாடுகளுக்குப் போவதுபோன்று புறப்பட்டேன். அன்று மாலையில் நான் என் கையால் சுவரில் துவாரமிட்டேன். இரவில் நான் என் தோளில் பைகளைப் போட்டுக்கொண்டு விலகினேன். நான் இதனைச் செய்தேன். எனவே ஜனங்களால் என்னைப் பார்க்கமுடிந்தது.

மறுநாள் காலையில், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று இஸ்ரவேலின் கலகக்காரர்கள் உன்னைப் பார்த்துக் கேட்டார்கள் அல்லவா? 10 அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார் என்று அவர்களிடம் கூறு. இந்தத் துயரச் செய்தியானது எருசலேமின் தலைவரையும் இஸ்ரவேலில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும் பற்றியது. 11 அவர்களிடம், ‘நான் (எசேக்கியேல்) ஜனங்களாகிய உங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறேன். நான் செய்திருக்கின்றவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்’ என்று சொல். நீங்கள் சிறைக் கைதிகளாகத் தூர நாடுகளுக்குப் பலவந்தமாக அனுப்பப்படுவீர்கள். 12 உங்கள் தலைவன் சுவற்றில் துவாரமிட்டு அவற்றின் வழியாக நழுவிப் போய்விடுவான். அவன் தனது முகத்தை மூடுவான். எனவே, ஜனங்களால் அவனை அடையாளம் காணமுடியாது. அவன் எங்கே போகிறான் என்பதை அவனது கண்களால் கண்டுகொள்ள முடியாது. 13 அவன் தப்பித்துக்கொள்ள முயல்வான். ஆனால் நான் (தேவன்) அவனைப் பிடித்துக்கொள்வேன்! அவன் என் வலைக்குள் பிடிக்கப்படுவான். நான் அவனை கல்தேயர் வாழும் பாபிலோனுக்கு கொண்டு போவேன். ஆனாலும் அவன் பாபிலோனைப் பார்க்கமுடியாது. பகைவர்கள் அவனது கண்களைக் குத்திக் குருடாக்குவார்கள். பிறகு அவன் அங்கு மரிப்பான். 14 இஸ்ரவேலைச் சுற்றியுள்ள நாடுகளில் வாழும்படி நான் அரசனின் ஜனங்களைப் பலவந்தப்படுத்துவேன். நான் அவனது படையைக் காற்றில் சிதறடிப்பேன். பகைவரின் படைவீரர்கள் அவர்களைத் துரத்துவார்கள். 15 பிறகு அந்த ஜனங்கள், நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். நான் அவர்களைப் பல நாடுகளில் சிதறடித்தேன் என்பதையும் அறிவார்கள். அவர்களை வேறு நாடுகளுக்குச் செல்லும்படி நான் கட்டாயப்படுத்தினேன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

16 “ஆனால், கொஞ்சம் ஜனங்களை நான் வாழும்படி அனுமதித்தேன். அவர்கள் நோயாலும் பசியாலும் போராலும் மரிக்கமாட்டார்கள். நான் அந்த ஜனங்களை வாழவிடுவேன், அதனால் அவர்கள் எனக்கு எதிராகச் செய்த பயங்கரமான காரியங்களைப்பற்றிப் பிற ஜனங்களுக்குச் சொல்ல முடியும், பிறகு, நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

பயத்தோடு நடுங்கு

17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, நீ பயந்தவனைப்போன்று நடக்கவேண்டும். நீ உணவை உண்ணும்போது நடுங்கவேண்டும். நீ உனது தண்ணீரைக் குடிக்கும்போது கவலையும் அச்சமும் கொண்டவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். 19 நீ இதனைப் பொது ஜனங்களுக்குச் சொல்லவேண்டும். நீ, இவ்வாறு சொல்லவேண்டும். எருசலேமிலும் இஸ்ரவேலின் மற்றப் பகுதிகளிலும் வாழ்கிற ஜனங்களுக்கு, ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். உங்கள் உணவை நீங்கள் உண்ணும்போது ஜனங்களாகிய நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள், நீங்கள் உங்கள் தண்ணீரைக் குடிக்கும்போது திகிலடைவீர்கள். ஏனென்றால், உங்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிக்கப்படும்! அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களிடம் பகைவர்கள் கொடூரமாக நடந்துகொள்வார்கள். 20 இப்பொழுது உங்கள் நகரங்களில் ஏராளமான ஜனங்கள் வாழ்கிறார்கள். ஆனால் அந்நகரங்கள் அழிக்கப்படும். உங்கள் நாடு முழுவதும் பாழாக்கப்படும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”

துன்பம் வரும்

21 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 22 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் நாட்டைப்பற்றி ஜனங்கள் இந்தப் பாடலை ஏன் பாடுகின்றனர்?

“‘துன்பம் விரைவில் வராது,
    தரிசனம் நிகழாது.’

23 “அவர்களின் கர்த்தராகிய ஆண்டவர் இப்பாடலை நிறுத்துவார் என்று அந்த ஜனங்களிடம் சொல். இனிமேல் அவர்கள் இஸ்ரவேலைப்பற்றி அவற்றைச் சொல்லமாட்டார்கள். இப்பொழுது அவர்கள் இப்பாடலைச் சொல்லுவார்கள்:

“‘துன்பம் விரைவில் வரும்,
    தரிசனம் நிகழும்.’

24 “இது உண்மை. இனிமேல் பொய்யான தரிசனங்கள் இஸ்ரவேலில் இராது. மந்திரவாதிகளின் நிறைவேறாத குறிகளும் இனிமேல் இராது. 25 ஏனென்றால், நானே கர்த்தர். என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்வேன். அவை நிகழும்! நான் அதன் காலத்தை நீடிக்கச் செய்யமாட்டேன். அத்துன்பங்கள் உன் சொந்த வாழ்நாளிலேயே விரைவில் வரும்! கலகக்காரர்களே, நான் எதையாவது சொல்லும்போது அது நடக்கும்படிச் செய்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

26 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 27 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் நான் உனக்குக் கொடுக்கும் தரிசனங்கள் நிகழ அநேக நாட்கள் ஆகும் என்று எண்ணுகிறார்கள். பல, வருஷங்கள் கழித்து நடக்கப்போகும் காரியங்களைப்பற்றி நீ பேசுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். 28 எனவே நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: நான் இனி தாமதிக்கமாட்டேன். ஏதாவது நிகழும் என்று நான் சொன்னால் அது நிகழும்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.