Add parallel Print Page Options

இஸ்ரவேலின் தண்டனை முடியும்

40 உனது தேவன் கூறுகிறார்,
    “ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்!
எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள்.
    உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது.
    ‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு.
கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும்
    இருமுறை தண்டித்தார்.”

கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்!
“கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்!
    நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்!
ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள்.
    ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள்.
    கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள்.
பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும்.
    கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள்.
ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!”
ஒரு குரல் சொன்னது, “பேசு!”
    எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?”
அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள்.
    அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
    அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது.
கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும்.
    அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும்.
    உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும்.
    ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”

மீட்பு: தேவனுடைய நற்செய்தி

சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன.
    உயரமான மலைக்கு மேலே போய் நற்செய்திகளை சத்தமாய் சொல்! எருசலேமே!
உன்னிடம், சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன அஞ்சவேண்டாம்.
    சாந்தமாய் பேசு! யூதாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் இந்தச் செய்திகளைக் கூறு: “பார், உன் தேவன் இங்கே இருக்கிறார்!”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார்.
    எல்லா ஜனங்களையும் ஆள அவர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார்.
கர்த்தர் தமது ஜனங்களுக்காக விருதுகளைக் கொண்டுவருவார்.
    அவரோடு அவர்களது பலன் இருக்கும்.
11 ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார்.
    கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்தி அவரது ஆடுகளை ஒன்று சேர்ப்பார்.
    கர்த்தர் சிறிய ஆடுகளை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொள்வார். அவற்றின் தாய் ஆடுகள் அவர் பின்னால் நடக்கும்.

தேவன் உலகைப் படைத்தார், அவர் அதனை ஆளுகிறார்

12 யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்?
    யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்?
யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்?
    யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான்.
13 கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
    கர்த்தரிடம் அவர் எப்படிச் செய்யவேண்டும் என யாரும் கூறவில்லை.
14 கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா?
    கர்த்தருக்கு நேர்மையாக இருக்கும்படி யாராவது கற்பித்தார்களா?
கர்த்தருக்கு அறிவை யாராவது கற்பித்தார்களா கர்த்தருக்கு ஞானத்தோடு இருக்குபடி யார் கற்பித்தது?
    இல்லை! கர்த்தர் இவற்றைப்பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கிறார்.
15 பார், நாடுகள் எல்லாம் வாளியில் ஒரு சிறு துளி போன்றது.
    வெகு தொலைவிலுள்ள நாடுகளை கர்த்தர் எடுத்துக்கொண்டால்
    அவரது தராசில் அவற்றை வைத்தால் அவை மணலின் சிறு பொடிகள் போன்று இருக்கும்.
16 லீபனோனில் உள்ள அனைத்து மரங்களும் கர்த்தருக்கு எரித்துப்போட போதாது.
    லீபனோனில் உள்ள அனைத்து மிருகங்களும் பலிக்காக கொல்வதற்குப்போதாது.
17 தேவனோடு ஒப்பிடும்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுமில்லை.
    தேவனோடு ஒப்பிடும்போது அனைத்து நாடுகளும் ஈடு ஒன்றுமே இல்லாமல் போகும்.

தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது

18 எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது!
    தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது!
19 ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து
    அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர்.
ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான்.
    பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான்.
    வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான்.
20 அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.
    அது உளுத்துப்போகாத மரவகையைச் சேர்ந்தது.
பிறகு, அவன் ஒரு சிறந்த மரத்தச்சனைக் கண்டுபிடிக்கிறான்.
    அந்த வேலைக்காரன் விழாமல் இருக்கிற ஒரு தெய்வம் செய்கிறான்.
21 நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா?
    நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்!
உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்!
    இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்!
22 கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
    அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள்.
அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார்.
    அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார்.
23 ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார்.
    அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார்.
24 ஆளுவோர் தாவரங்களைப்போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள்.
    ஆனால், அவை தரைக்குள் தன் வேர்களைச் செலுத்துவதற்குமுன்,
தேவன் அத்தாவரங்களின் மேல் ஊதுகிறார்.
    அவை செத்து காய்ந்து போகின்றன.
    பெருங்காற்று அவற்றை புல்லைப்போல அடித்துப்போகும்.
25 பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது.
    எனக்கு இணையாக ஒருவரும் இல்லை.

26 மேலே வானங்களைப் பாருங்கள்.
    இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்?
வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்?
    ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்?
உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர்.
    எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.

27 யாக்கோபே, இது உண்மை. இஸ்ரவேலே, நீ இதனை நம்பவேண்டும்!
    எனவே, நீ எதற்காக இதைக் கூறுகிறாய்?
“கர்த்தர் நான் வாழும் வழியை அறியமாட்டார்.
    தேவன் என்னைக் கண்டுபிடித்துத் தண்டிக்கமாட்டார்.”
28 தேவனாகிய கர்த்தர் மிகவும் ஞானமுள்ளவர் என்று நீ உறுதியாகக் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய்.
    ஜனங்கள் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கற்றுக்கொள்ள இயலாது.
கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை.
    கர்த்தர் தொலைதூர இடங்களைப் பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவிக்கிறார்.
29 கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார்.
    ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.
30 இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர்
    சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.
31 ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள்
    புதிய சிறகுகள் முளைக்கின்ற கழுகுகளைப்போல மீண்டும் பலம் பெறுகின்றனர்.
இந்த ஜனங்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள்.
    இந்த ஜனங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.